ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை எதிர்த்து திரைத்துறையை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று இந்தச் சட்டத்திற்கான கருத்து கேட்கும் நாள் முடிந்த நிலையில் இதற்கான எதிர்ப்பு அலை இன்றுவரை ஒயவில்லை.
கமல்ஹாசன், அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், பா.ரஞ்சித், சூர்யா உள்ளிட்ட பலர் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் கார்த்தி, இந்த சட்டத்தில் மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அதுபோல் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், 'பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? இப்படி ஒரு பரபரப்பான மாற்றங்கள் ஏன்? சினிமா துறையை எப்போதும் ஏன் குறிவைக்க வேண்டும்? முதல் ஜிஎஸ்டி, பின்னர் பைரசி, இப்போது இந்த சட்டம்? இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவது நியாயமில்லை.'. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த்திற்கு நெட்டிசன் ஒருவர் ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் குறித்து எதுவும் பேசவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சித்தார்த், “ சொல்லி ரொம்ப நாள் ஆச்சுபா, போய் படிங்க போங்க. அப்படியே மத்தவங்களையும் கருத்து சொல்ல சொல்லுங்க. நாடு, சினிமா, கருத்து சுதந்திரம், எல்லாம் பிரச்னையாதான் இருக்கு” என்று பதிவிட்டுள்ளார்.