சீனாவின் வூஹான் நகரித்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் மக்கள் மூழ்கியிருக்க, இயல்பு வாழ்க்கை பலருக்கு பிரச்னைக்குரியதாக மாறி வருகிறது. இந்நோயின் தாக்கத்தால் மக்கள் ஆயிரக்கணக்கில் மரணம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கான தீர்வு இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது சோகம். இந்தியாவிலும் கரோனா அச்சம் நிலவி வந்தாலும், அரசாங்கம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து மக்களை தற்காத்து வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகமெங்கும் திரைத்துறை வேலையின்றி முடங்கிக் கிடக்கிறது. பல ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொரோனா பிரச்னையையே மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார் கனடாவைச் சேர்ந்த இயக்குநர் முஸ்தபா கேஷ்வாரி (Mostafa Keshvari).
இந்தப் படத்தின் மையக் கதை கொரோனா வைரஸ் பற்றிய அச்சம்தான். சுயாதீன படமாக (Independent movie) இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார் முஸ்தபா. லிப்டில் மாட்டிக் கொண்ட 7 நபர்கள் கொரோனா பயத்தில் உறைந்திருக்க, திடீரென்று அங்கிருந்த ஒரு சீனப் பெண் இருமத் தொடங்க மற்றவர்கள் பீதிக்குள்ளாகின்றனர்.அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே இக்கதை.
இந்தப் படத்தின் பெயர் கொரோனா என்பது குறிப்பிடத்த்தக்கது.