விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.
இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனதுடன் ஏராளமான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். இவர்களுடன் பழைய மற்றும் புதிய கோமாளிகளும் கோதாவில் இறங்கியுள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், குக் வித் கோமாளியில் முதல் எலிமினேஷனும் தற்போது நடந்தது. முன்னதாக, 10 போட்டியாளர்களில் இருந்து கிஷோர் ராஜ்குமார், காளையன் மற்றும் ஷெரின் ஆகியோர் எலிமினேஷன் சுற்றுக்கு சென்றனர். இதனையடுத்து, காளையன் இதிலிருந்து முதல் ஆளாக Save ஆக, இறுதியில் ஷெரின் மற்றும் கிஷோர் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறும் சூழல் உருவாகி இருந்தது. பின்னர் இவர்களுள் கிஷோர் எலிமினேட் ஆனதாக நடுவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் அறிவித்தனர்.
இந்நிலையில் எலிமினேஷனுக்கு, சிவாங்கியை அனுப்பாமல் தன்னை வெளியே அனுப்பியது ஏன் என கிஷோர் கோபமாக கேட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதனைத் தொடர்ந்து அது பற்றி தமது சமூக வலைதளத்தில் விளக்கியுள்ள கிஷோர் ராஜ்குமார் அப்படி ஒரு கருத்தை தான் சொல்லவில்லை என தெரிவித்துள்ளார். அத்துடன் இப்படி பரவுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.