நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி அதிரி புதிரி ஹிட் அடித்த வெப் சிரீஸ், மணி ஹெய்ஸ்ட்.
ஸ்பானிஷ் மொழியில் அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இந்தத் தொடர், 2017ஆம் ஆண்டு 'ஆண்டெனா 3' என்ற ஸ்பானிய தொலைக்காட்சி சேனலில் 'லா காஸா டி பாபெல்' என்ற பெயரில் முதன்முதலில் ஒளிபரப்பானது.
தற்போது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது மணி ஹெய்ஸ்ட். ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வழிநடத்தும் ப்ரொஃபஸரையும் மையப்படுத்திய இந்த மணி ஹெய்ஸ்ட் தொடரில் ப்ரொஃபஸர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.
'டோக்யோ' என்கிற பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படும் இந்த சீரிஸில் ஏற்கனவே 4 சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசனின் முதல் பகுதி இன்று (செப்டம்பர் 3-ஆம் தேதி) தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸின் 2வது பகுதி டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.
இந்த சீரிஸை பார்ப்பதில் பலரும் மும்முரம் காட்டி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் 'வெர்வ் லாஜிக்' என்ற நிறுவனம் செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று, இந்த வெப் சீரிஸை தங்களது ஊழியர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக விடுமுறை அறிவித்துள்ளது.
'நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விடுமுறையில் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நெட்ஃப்ளிக்ஸில் இந்த சீரிஸை காண்பதற்காக சொல்லாமல் கொள்ளாமல் விடுமுறை எடுப்பதை தவிர்ப்பதற்காக, மொத்த நிறுவனத்துக்கும் விடுமுறையை அறிவித்து இந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.