தமிழ் திரையுலகிற்கு தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய தனது குரு பயன்படுத்திய விலைமதிப்பில்லா பரிசு ஒன்றை பெற்றிருப்பதாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1987ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விவேக். அதைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான விவேக், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில், தனது குருநாதரான கே.பாலச்சந்தர் பயன்படுத்திய விலைமதிப்பில்லாத பரிசு ஒன்று விவேக்கிற்கு கிடைத்துள்ளது. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் திரைக்கதை எழுத பயன்படுத்திய பேனாவை நடிகர் விவேக் பரிசாக பெற்றுள்ளார். இதனை கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்த்சாமி விவேக்கிற்கு வழங்கியுள்ளார். இது குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது ட்வீட்டில், “யாருடைய எழுத்துக்களைப் படித்தும், படமாகப் பார்த்தும், பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்” என்று தெரிவித்து புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது ... பரிசு அல்ல... வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள் pic.twitter.com/GRHcTAg8m9
— Vivekh actor (@Actor_Vivek) December 2, 2019