பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார்.
57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார். தன் காரணமாக நடிகர் மயில்சாமி பல மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார். இதன் தொடர்ச்சியாக சென்னை விருகம்பாக்கத்தில் தேர்தலில் நின்றது கூட குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் நடிகர் மயில்சாமி தான் வசித்துவந்த சென்னை சாலிகிராமத்தில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் தன் குடும்பத்தினரால் சென்னை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் நடிகர் மயில்சாமியின் மரணத்தை உறுதி செய்தனர்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் திடீர் மரணம், தமிழ் சினிமாவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.