சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காஃபி வித் காதல் திரைப்படம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரஸ்ய அனுபவங்களை இப்படத்தில் நடித்திருக்கும் ஜெய், ஜீவா, அம்ரிதா ஐயர் மற்றும் டிடி ஆகியோர் இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கின்றனர்.
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் காஃபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மறைந்த நடிகர் பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவர், ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவர். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி இதில் நடித்திருக்கும் நடிகர்கள் பேசுகின்றனர். அதில் நடிகர் ஜெய் ஊட்டியில் இரவு நேரத்தில் அதுவும் மழையில் சண்டை காட்சி ஒன்று எடுக்க இருப்பதாக இயக்குனர் தன்னிடத்தில் சொல்லியபோது தான் நம்பவில்லை என்றும், பின்னர் உண்மையாகவே நடந்தபோது மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் இதுபற்றி அவர் பேசுகையில்,"ஊட்டியில் மழையில் ஷூட்டிங் என்றதும் யோசித்தோம். ஆனால் Fun ஆகவே இருந்தது. ஜீவா கூட என்னிடத்தில்,"டார்லிங் உண்மையாகவே மழையில தான் எடுக்குறாங்க போல" எனக்கேட்டார்" என புன்னைகையுடன் குறிப்பிட்டார். அதேபோல, இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கும் அம்ரிதா ஐயர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
படப்பிடிப்பு முடிந்து ஒவ்வொரு குழுவினரும் கிளம்பியபோது மனவருத்தம் அடைந்ததாகவும், திருமண வீட்டில் இருந்து உறவினர்கள் கிளம்பிச் செல்வதுபோல அது இருந்ததாகவும் இயக்குனரிடத்தில் தான் தெரிவித்ததாக ஜெய் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல அனுபவங்கள் குறித்து ஜெய், ஜீவா மற்றும் டிடி இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.