தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில், மக்கள் ஓட்டுச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து, தங்கள் ஜனநாயக கடமையை முடித்து வருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, நமது கோலிவுட் பிரபலங்கள் பலர் இன்று காலையில் இருந்தே வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான அஜித், ஷாலினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய் என கோலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.
அதிலும் முதல் ஆளாக நடிகர் அஜித் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் பொறுமையாக காத்திருந்து தனது ஓட்டை செலுத்தினார். இந்த செய்தி காலையிலிருந்து வைரலாகி வருகிறது. ஆனால் மற்றொரு வீடியோவும் வைரல் ஆகி வந்தது. அதில் ரசிகர் ஒருவர் மாஸ்க் அணியாமல் அஜித்திடம் நெருங்கி சென்று, அவரது அனுமதி இல்லாமல் செல்பி எடுக்க கடுமையாக முயன்றார். இதனை பார்த்த அஜித் அந்த போனை எடுத்து வைத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
நடிகர் அஜித்தை பற்றி அனைவருக்குமே தெரியும். பொதுவாகவே தனது ரசிகர்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் அவர் செல்பி எடுக்க கேட்பவர்களிடம் கூட பொறுமையாக தானே போனை வாங்கி புகைப்படம் எடுத்து தரும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில் வைரலான வீடியோவில் சம்பந்தப்பட்ட அந்த நபர் தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "தயவு செய்து தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். மாஸ்க் அணியாமல் செல்பி எடுக்க முயன்றபோது அஜித் என்னிடம் போனை பிடுங்கி இரண்டு நிமிடத்திலேயே என்னிடம் கொடுத்து விட்டார். எனது போனை உடைக்கவோ வேறு எதுவும் அவர் செய்யவில்லை. இதோ பாருங்கள் எனது போன் நன்றாக தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.