இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்தப்படம் குறித்து வெளியான செய்திக்கு அவர் பதிலளித்துள்ளார்.
சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கியிருப்பவர் சுதா கொங்கரா. இவர் இதற்கு முன்னர் துரோகி, இறுதிச்சுற்று உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூரரைப் போற்று திரைப்படம் பக்காவாக ரெடியாகி ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதனிடையே சுதா கொங்கராவின் அடுத்தப்படம் விஜய்யுடன் என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் சுதா கொங்கரா எனும் ட்விட்டர் ஐடியில், எனது அடுத்தப்பட அறிவிப்பு ஜூன் 22 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அன்றுதான் விஜய்யின் பிறந்தநாள் என்பதால், அவரின் அடுத்தப்படம் விஜய்யுடன் என சமூக வலைதளங்களில் செய்திகள் கிளம்பின. இதனிடையே அவ்வாறு பதிவிட்டது ஃபேக் ஐடி என கூறப்பட்டதையடுத்து, நமது தரப்பில் இயக்குநர் சுதா கொங்கராவிடம் பேசினோம், அப்போது அவர், ''நான் ட்விட்டர் உள்ளிட்ட எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. நான் புதிய படத்தில் ஒப்பந்தாமானால், அதுகுறித்து நானே அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பேன். அதனால் ஃபேக் ஐடிகளை தவிர்த்துவிட்டு, அதன் மேல் நேரத்தை வீனாக்காமல் இருங்கள்' என தெரிவித்துள்ளார். சுதா கொங்கராவின் இந்த பதில் மூலம், அவரின் அடுத்தப்படம் குறித்து கிளம்பிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.