தமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவிருப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் மீண்டும் தனது குரு மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார். இப்படத்தில் நடிக்க பல முன்னணி பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், சுந்தர சோழனின் மூத்த மகனும், அருள்மொழியின் அண்ணனுமான ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை துண்டித்து கொன்றதற்காக ஆதித்ய கரிகாலனின் வீரம், தைரியம் பாராட்டப்பட்டது. சுந்தர சோழனுக்கு பிறகு அரசனாக தேர்வானவர் ஆதித்ய கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குகு நடிகர்கள் சிவானந்த் மற்றும் குமாரவேல் ஆகியோர் திரைக்கதை எழுதி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் ‘பொன்னியன் செல்வன்’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.