பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த பிக்பாஸ் 5 வது சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கமல்ஹாசனால் அறிமுகப் படுத்தப் பட்டனர். பல்வேறு துறைகளை சேர்ந்த பலரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அந்த வகையில் நாட்டுப்புற கலைஞர், நாடக நடிகர் மற்றும் இசைக் கலைஞர்கள் சிலரும் இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கின்றனர். ஆம் பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு பல்வேறு நாட்டுப்புற மற்றும் திரைப் பாடல்களை பாடி அசத்தி இருக்கிறார். அவரை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.
முன்னதாக பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்த கேஸ்ட்லஸ் கலெக்டிவ் இசைக் குழுவின் அங்கமாக விளங்கும் இசைவாணி அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் சமூக விழிப்புணர்வு கானா பாடல்களை பாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தமிழகத்தை சேர்ந்த பிரபல நாடக நடிகை, பாடகர் என பன்முக கலைஞராக நாடகக் கலைத்துறையில் விளங்கும் தாமரைச்செல்வி அறிமுகப்படுத்தப்பட்டார். தாமரைச்செல்வியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக பிரபல நாட்டுப்புறப் பாடகரும், விஜய் டிவி சூப்பர் சிங்கரின் போட்டியாளருமான முத்துசிற்பி தாமரைச்செல்வியுடன் இணைந்து, ஒரு சிறு நாடக கச்சேரியை அரங்கேற்றி அவரை அறிமுகப் படுத்தி வைத்திருந்தார்கள்.
தொடர்ந்து தமிழ் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைலில் ராப் பாடலை பாடி தொடர்ச்சியாக, ரசிகர்களை கவர்ந்து வரும் ஐக்கி பெர்ரி இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார். தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல பாடகரான ஐக்கி பெர்ரியின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு மாடலிங் போல் இருக்கும் இவர் ஒரு பியூட்டிஷியன் ஆகவும் இருக்கிறார்.
இவர்களுக்கு என்று தனி குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வழி அனுப்பப்பட்டனர். இப்படி ராப் இசை, கானா பாடகர், நாட்டுப்புற பாடகி, நாடக கலைஞர் என பல்வேறு விதமான நகர்ப்புற கலைஞர்கள் இந்த சீசனில் இருப்பது ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. தினமும் ஒரு பாடலை கேட்கலாம் என்பதால் ரசிகர்கள் குஷியாக இருக்கின்றனர்.