தேவி தியேட்டருக்கு இன்று ( மே 23, 2020) அன்று ஐம்பது வயதாகிறது. இந்த தியேட்டரின் முதல் திரையிடல் 1970-ம் ஆண்டு மே 23 சனிக்கிழமை அன்று ஸ்வீட் சாரிட்டி (70 மிமீ) திரைப்படத்துடன் தொடங்கியது. ( (21 மே முதல் முன்பதிவு செய்யப்பட்டது)
மால்கள், மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள் எல்லாம் வருவதற்கு முன்பு, திரைப்பட ரசிகர்களுக்கு சென்னையில் மிகப்பெரிய அடையாளமாக தேவி தியேட்டர் இருந்தது. இன்றும் எவ்வளவு போட்டிகள் நிறைந்திருந்தாலும் தனித்துவத்துடன் சென்னையின் பெருமையாக திகழ்கிறது. சென்னையின் ஐகானிக் லேண்ட்மார்க் இடங்கள் என பத்தை தேர்வு செய்தீர்கள் எனில், தேவி தியேட்டர் நிச்சயம் அதில் இருக்கும்.
தேவி தியேட்டர் வளாகத்தில் உள்ள ஸ்க்ரீன்கள் தேவி, தேவி பாரடைஸ், தேவி பாலா, தேவி கலா ஆகியவைகள் ஆகும். என்றென்றும் மறக்கமுடியாத சூப்பர் ஹிட் படங்கள் அங்கே பார்த்து ரசித்த அனுபவம் பலருக்கு உண்டு. இந்த புகழ்பெற்ற திரையரங்கில் அழகான நினைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம் . அதிலும் குறிப்பாக, ஆன்லைனில் முன்பதிவு வருவதற்கு முன்பான காலகட்டத்தில் மக்கள் பெரும் திரளாக திரண்டு தியேட்டர்களில் முண்டியடித்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்லும் காட்சிகளை சென்னைவாசிகள் மறந்திருக்க முடியாது. அதிலும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்துவிடத் துடிக்கும் ரசிகர்களுக்கு தேவி தியேட்டர்தான் முதல் சாய்ஸ். காரணம் நவீன தொழில்நுட்பத்துடன் படங்களை திரையிடுவதில் தேவி குழுமம் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.
தேவி குழுமம் ஐம்பதாண்டு பொற்காலத்தை கொண்டாடும் இந்த வேளையில், COVID -19, பிரச்சனை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் விரைவில் மீண்டும் முன்பை விட பன்மடங்கு உற்சாகத்துடன் இயங்கத் தொடங்கும். இது குறித்து மீடியாவுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பது,
'தேவி சினிப்ளெக்ஸ் இந்த பேரிடர் காலத்திலிருந்து மீண்டு வந்து, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் திரைப்பட ஆர்வலர்களை எப்போதும் மகிழ்விக்கும். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஊடக நபர்களுடன் தொடர்புகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். உங்களுக்காக ஒரு சிறிய வீடியோவை இணைத்துள்ளோம்.