விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன்-1 பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்னும் மாஸான ரசிகர்களை குவித்தது.
இந்நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் குக்குகளாக அஷ்வின், கனி, ஷகிலா, பவித்ரா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பாலா, சரத், சுனிதா உள்ளிட்டோரும் பங்கு பெற்றனர். நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ‘காரக்குழம்பு’ கனி டைட்டில் வென்றார். இரண்டாவதாக ஷகிலாவும் மூன்றாவதாக அஷ்வினும் வென்றனர்.
இதனிடையே கோமாளிகளுக்கும், குக்குகளுக்கும், நடுவர்களான வெங்கடேஷ் பாத், செஃப் தாமோதர் உள்ளிட்டோருக்கும் அங்கீகாரம் வழங்கும் விதமாக அவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. பிரபலமான பல சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ஏற்கனவே பிரபலமாகி இருந்த வெங்கடேஷ் பாத் மற்றும் செஃப் தாமு இருவரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இன்னும் தமிழ் மக்களின் மனதில் நேரடியாக சென்று அமர்ந்தனர்.
இருவரின் இயல்பான இன்னொரு பரிமாணத்தை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. அனைவரிடமும் இயல்பாக பேசி பழகி சிரித்து அரட்டை அடித்து விளையாண்டு அவர்களுக்கு சமமாக கவுண்டர்கள் கொடுத்து இருவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கியமான பிளஸ் ஆக மாற்றினர். அத்துடன் இருவரும் ஒவ்வொரு போட்டியாளரும் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து அவர்களின் மனம் கோணாமல் அதே சமயத்தில் சரியான கமெண்ட் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த ஃபைனல் நிகழ்ச்சியில் தனக்கான விருதினைப் பெறும்போது செஃப் தாமு சற்று நேரம் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுது, தழுதழுத்த குரலில், “நான் இதை எதிர்பார்க்கவில்லை.. இப்படி ஒரு அங்கீகாரத்தை தான் நான் விரும்பினேன்.. இப்போது தான் அது நடந்திருக்கிறது. குக் வித் கோமாளிக்கு வந்தபிறகுதான் நான் சிரிக்க தொடங்கினேன்” என்று கூறி அழுதார். அவருக்கு மொத்த கோமாளி போட்டியாளர்களும் சிம்புவும் ஆறுதல் கூறி, வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.