இன்று தமிழ் சினிமாவில் சீயான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரமுக்கு பிறந்தநாள். ஆர்வமும் அதற்கான உழைப்பும் இருந்தால், கண்டிப்பாக சக்சஸ் கொடுக்க முடியும் என்பதற்கான ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருபவர் விக்ரம். எத்தனை தோல்விகளையும் அடிகளையும் பார்த்திருந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து நிற்க ஒரு சிலரால் மட்டுமே முடியும், அப்படியானவர்களில் விக்ரமுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இந்த நேரத்தில் விக்ரமின் திரைப்பயணம் குறித்து ஒரு பார்வை.
ஆரம்பத்தில் விக்ரமுக்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. அவர் நடித்த மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம் உள்ளிட்ட படங்களை அவர் பெரிதும் நம்பினார். ஆனால் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக அந்த படங்கள் வெற்றியை கொடுக்காமல் போனது. இருந்து மனம் தளராமல் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் தலைகாட்டி வந்தார். ஒரு ஹீரோவாக ஆகிவிட்ட போதிலும், அஜித்துக்கு அமராவதியிலும், பிரபுதேவாவுக்கு காதலனிலும் டப்பிங் கொடுத்தார். அப்படி இந்த தொழிலை நேசித்து செய்தார் விக்ரம். அதற்கு பலனாக கிடைத்தது பாலாவின் படம். சேதுவில் ரகளையான கல்லூரி மாணவராகவும், மனம் பிறழ்ந்த நோயாளியாகவும் இருவேறு பரிமாணங்களை காட்டினார் விக்ரம். அது அவருக்கு பல விருதுகளையும் மக்களிடத்தில் நல்ல பெயரையும் எடுத்து கொடுத்தது. அடுத்து சில படங்கள் நடித்தவர், பக்கா கமர்ஷியல் ஜானரில் கலக்கிய திரைப்படம் தில். தரணி இயக்கிய இத்திரைப்படத்தில் போலீஸ் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர் வேடத்தில் சீயான் கலக்கினார். அந்த வயதிற்கேற்ற கோபம், மிடுக்கு என விக்ரம் முழுசாக அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தார். அதே நேரத்தில் கண் தெரியாதவராக காசியில் நடித்து கலக்கினார். அதன் பிறகு ஜெமினி. ஓ போடு பாடலை தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடுமா.. என்ன.? இது போன்ற மாஸ் கமர்ஷியல் படங்களையும், சாமுராய் போன்ற படங்களையும் அவர் ஒருங்கே நடித்து அசத்தி கொண்டிருந்தார்.
மீண்டும் தரணியுடன் அவர் கை கோர்த்த திரைப்படம் தூள். இது விக்ரமின் க்ராஃபை பீக்கில் ஏற்றி சென்றது. கிராமத்தில் இருந்து நகரம் வரும் ஹீரோ, கெட்ட அரசியல்வாதியை அழிக்கிறான். எந்த ரெகுலரான கமர்ஷியல் டெம்ப்ளேட்டை சூப்பர் ஹிட் ஆக்கியதில் தரணியின் எழுத்துக்கும், விக்ரமின் Screen Presence-க்கும் பெரிய பங்குண்டு. பாடல், காமெடி, டான்ஸ், ஆக்ஷன், ரொமான்ஸ் என ஆல் ஏரியாவிலும் விக்ரம் புகுந்து விளையாடினார். அடுத்த ஹரியுடன் சாமி. உண்மையாகவே விக்ரம் சாமிதான் ஆடினார். ஆறுச்சாமி எனும் கதாபாத்திரம் எப்போதுமே மறையாத அளவுக்கு, மாஸ் காட்டினார் விக்ரம். தூள், சாமி என அதே கமர்ஷியல் ஏரியாவில் விக்ரம் பயணித்து இருக்கலாம், அவருக்கு அதையெல்லாம் தாண்டி, தனக்கும், தன் நடிப்புக்கும் சவாலான படங்களை எதிர்ப்பார்த்தார். அப்படி நடித்தப்படம் தான் பிதாமகன். மீண்டும் பாலாவுடன், படம் முழுக்க சூர்யா பேசி கொண்டிருக்க, நம்மவருக்கு வசனமே கிடையாது. சித்தனாக தனது உடல் மொழியில் விக்ரம் காட்டிய மிரட்டலான நடிப்பு, அவருக்கு தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. இதற்கு பிறகு விக்ரம் நடித்த அந்நியன், அவரது இமேஜை தூக்கு தூக்கு என தூக்கியது.
அந்நியன், அம்பி, ரெமோ என மூன்று பேரின் நடிப்பை ஒற்றை ஆளாக காட்டி சிக்சர் அடித்தார் சியான். ஒரே நேரத்தில் அந்நியனாகவும், அம்பியாகவும் நடிக்கும் காட்சியெல்லாம், பக்கா சீயான் மெட்டிரியல். இதற்கு பிறகு பீமா, கந்தசாமி, ராவணன் என படத்துக்கு படம் வெரைட்டி காட்டி கொண்டிருந்தார் விக்ரம். அப்படி அவரது நடிப்பின் மற்றுமொரு உச்சமாக அமைந்த படம் தெய்வத்திருமகள். மூளை வளர்ச்சி குறைபாடுள்ளவராக விக்ரம் காட்டிய நடிப்பு, எல்லோரிடத்திலும் கண்ணீரை வர வைத்தது. ஒரு குழந்தையாகவே மாறி நடித்தார் மனுஷன். அதற்காக பல விருதுகளையும் வென்றார். பிறகு ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் என எப்போதும் போல தனக்கே உரிய ஸ்டைலில் நடித்தார் விக்ரம். இத்தனை வருடம் நடித்த பிறகு, அதன் மேல் உள்ள வெறி எனக்கு அடங்காது என விக்ரம், ஷங்கரின் ஐ படத்தின் மூலம் காட்டினார். அந்த வயதில் பாடி பில்டராக உடலை ஏற்றி ஒரு லுக், உடல் இளைத்து ஸ்டைலிஷ் மாடலாக ஒரு லுக், இன்னும் தேகம் சுருங்கி நோய் பாதிப்படைந்தவராக ஒரு லுக். இதையெல்லாம் ஒரே படத்தில் கொண்டு வர, விக்ரம் எனும் அரக்கனால் மட்டுமே முடியும்.
பிறகு 10 எண்றதுக்குள்ள, ஸ்கெட்ச், சாமி-2 என விக்ரம் எப்போதும் போல தனக்கு பிடித்தமான படங்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். அடுத்து அஜய் ஞானமுத்துவுடன் கோப்ரா, மணிரத்னமுடன் பொன்னியின் செல்வன். இந்த இரண்டு பெரிய ப்ராஜக்ட்களையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்து கிடக்கின்றனர். விக்ரமின் ஸ்பெஷாலிட்டியே அவரது வெரைட்டி தான். அவரால் மாஸ் கமர்ஷியல் படங்களையும் கொடுக்க முடியும், க்ளாஸ் ஆக்டிங் படங்களிலும் நடிக்க முடியும். அதனால்தான், ஒரு கதை இருக்கு, உயிரை கொடுத்து நடிக்க யாராவது இருக்காங்களா..? என்ற கேள்விக்கு விக்ரமே எப்போதும் பதிலாக இருக்கிறார். நிஜத்திலும் விக்ரம் அந்நியன் படத்தை போலதான். அவர் அந்நியனாக மாறி நடித்து அசத்துவார், அம்பியாக குடும்பங்களுக்கான கமர்ஷியல் படங்களில் கலக்குவார், ரெமோவாக பக்கா லவ்வில் புகுந்து விளையாடுவார். இன்னும் எத்தனை கதாபாத்திரங்களை சினிமாவில் எழுத முடியுமோ, அவையனைத்தையும் விக்ரமால் செய்ய முடியும், அதுவும் சிறப்பாக, தரமாக. ஏன்னா, ஸ்கெட்ச் ஸ்கெட்ச்சு போட்டா, அது மிஸ் ஆகாது.
அப்படி எங்களை இத்தனை வருங்கடங்கள் தனது நடிப்பால் அசரடித்த சீயானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.