பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார்.
அயன், கோ, மாற்றான், அனேகன், கவன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் சூர்யாவை வைத்து மட்டும் 3 படங்களை இயக்கியிருக்கிறார்.
மோகன்லால் நடித்த மலையாளப் படமான தென்மாவின் கொம்பத் படத்தில் கேமரா மேனாக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். இந்த படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினை பெற்றார்.பின்னர் கனா கண்டேன் திரைப்படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். காதல் தேசம் படம் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கே.வி.ஆனந்த், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தவிர நேருக்கு நேர், பாய்ஸ், முதல்வன், செல்லமே உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
மீரா, சிவாஜி, மாற்றான் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் நடித்துமுள்ளார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா என திரைத்துறை பிரபலங்களின் அடுத்தடுத்த மரண சம்பவம் திரைத்துறையை மட்டுமல்லாது மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.