அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தன்னா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலரது நடிப்பில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பன்மொழிகளிலும் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா: தி ரைஸ்(பாகம்-1).
சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ இசையமைத்திருந்தார். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது.
இந்த படத்தில் இடம் பெற்ற (தமிழ் பதிப்பின்படி), ஓ சொல்றியா மாமா (பாடியவர் ஆண்ட்ரியா), சாமி சாமி (பாடியவர் ராஜலட்சுமி செந்தில்கணேஷ்) மற்றும் ஓடு ஓடு ஆடு (பாடியவர் பென்னி தயால்) உள்ளிட்ட பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகியுள்ளன.
இதில், ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு தென்னிந்திய முன்னணி திரைப்பட நடிகையான சமந்தா நடனம் ஆடியிருந்தார். இந்த பாடலும் ஹிட் ஆனது. சமந்தா ரசிகர்கள் பலரும் அல்லு அர்ஜூனுக்காக மட்டுமல்லாமல், சமந்தாவுக்காகவும் தான் புஷ்பா படத்துக்கு சென்றதாக மகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.
அல்லு அர்ஜூன் தெலுங்கில் மட்டுமே பிரபலமாக இருந்தபோதிலும், தான் தமிழ்நாட்டில் சென்னையில்தான் படித்து வளர்ந்ததாகவும் அதே சமயம், தமிழில் ஒரு சரியான களத்துடன் வரவேண்டும் என்று காத்திருந்ததாகவும் அல்லு அர்ஜூன் அண்மையில் சென்னையில் நடந்த புஷ்பா பட விழாவில் பேசினார்.
தமிழில் இப்படத்தின் பாடல்களை விவேகா எழுதியிருந்தார். இதேபோல் வசனங்களை மதன் கார்க்கி எழுதி இருந்தார். மதன் கார்க்கி உட்பட, தமிழ் பதிப்பில் புஷ்பா படத்தை சிறப்பாகக் கொண்டுவந்த அனைத்து கலைஞர்களுக்கும் புஷ்பா பட விழாவில் நடிகர் அல்லு அர்ஜூன் நன்றி சொல்லி நெகிழ்ந்தார். எனினும் புஷ்பா திரைபபடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அந்தந்த மாநில மொழிகளிலும், பெரும்பாலும் நேரடி கலைஞர்களைக் கொண்டு டப்பிங் செய்யப்பட்டது. எனவே தமிழ் ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை வசூல் ரீதியாகவும் பெற்றுள்ளது.
அதன்படி, புஷ்பா திரைப்படம் தமிழக அளவில் மட்டும், முதல் நாள் 4.08 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாகவும், இரண்டாவது நாள் 3.51 கோடி ரூபாய் கலெக்ஷன்களை பெற்றுள்ளதாகவும், 4.49 கோடி ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகவும், இதன் மூலம் புஷ்பா படத்தின் விநியோகஸ்தர்களுக்கு நல்ல நிகர லாபம் கிடைத்துள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
பொதுவாக மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இப்படியான வரவேற்புகள் கிடைப்பது என்பது முந்தைய வருடங்களில் இல்லாத அளவில், தற்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது.