பாலிவுட் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. லாக்டவுன் காரணமாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவரது மரணச் செய்தி அறிந்து மும்பை போலீஸார் அவரது குடியிருப்பை அடைந்தனர், சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. சுஷாந்த் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கியதாக போலீஸார் தகவல் அளித்துள்ளதாக பாலிவுட் மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் பிரேத பரிசோதனை செய்து முடித்தபின்னர்தான் இதுகுறித்த அறிக்கைகள் வெளியிடப்படும்.
கிஸ் தேஷ் மே ஹை மேரா தில் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், அதன்பின் பவித்ரா ரிஷ்டாவில் புகழ் பெற்றார். ஜீ டிவி நிகழ்ச்சியின் மூலம், அவர் பல ஆண்டுகளாக மக்களின் இதயங்களை கவர்ந்தார். நடிகை அங்கிதா லோக்னாடே உடனான அவரது கெமிஸ்ட்ரி ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.
அதன் பின் கை போ சே என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகுக்கு அறிமுகமானார் சுஷாந்த். எம் எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தின் மூலம் புகழ் அடைந்தார். கடைசியாக சிச்சோர் என்ற படத்தில் நடித்தார்.
அவரது மறைவு பாலிவுட் திரை உலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. திரைப் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவால் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.