பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. அதன்படி, “விளையாடு இல்ல வெளிய ஓடு’ எனும் இந்த டாஸ்கில் போட்டி போடுபவர்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
இதற்கான விதிமுறைகள் படித்து காட்டப்பட்டன. அதன்படி, “பிக்பாஸ் வீட்டுக்கு வந்து மூன்று வாரம் ஆனாலும், நான் நானாக இருக்கிறேன் என சும்மா வெட்டிப்பேச்சு பேசி பொழுது போக்கும் ரெண்டு பேர், இது தமிழ் மக்களுக்கான தமிழ் நிகழ்ச்சி.. இதில் தமிழ் தெரிந்தும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசும் 2 பேர், தூங்குற நேரத்தை எல்லாம் பேசி கழித்துவிட்டு பகல் நேரத்தில் தூங்கி வழியும் 2 பேர், பிக்பாஸ் வீட்டுக்குள் மைக் போடாமல் திரியும் 2 பேர், சுவாரஸ்யம் அற்ற 2 பேர்” என அனைவரையும் நாமினேட் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், மைக்கை சரியாக போடாதவர்கள் லிஸ்டில் பிரியங்கா, அபிஷேக் இருவரையும் பலரும் நாமினேட் செய்தனர். இதேபோல் பகலில் தூங்குபவர்கள் லிஸ்டில் நிரூப் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரையும் பலரும் நாமினேட் செய்தனர். இதைச் சொல்லும்போது, “எல்லோருக்குமே தெரியும். இவர்கள் இருவரும் தான் அதிக நேரம் தூங்குவதற்கு நேரம் கொடுத்தாலும் கூட, இரவு முழுவதும் பேசிவிட்டு பகலில் தூங்குகின்றனர்” என்று சொல்லி நாமினேட் செய்தனர்.
இதேபோல் பிக்பாஸ் வீட்டில் அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பேசுபவர்கள் லிஸ்டில் பலர் அபினயை மற்றும் சிலர் நிரூப்பை நாமினேட் செய்தனர்.
தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் சுவாரசியமற்றவர்கள் பெயரை நாமினேட் செய்வதற்கு பலரும் ஐக்கி பெர்ரியை தேர்வு செய்தனர். அபிஷேக் இமான் அண்ணாச்சியை தேர்வு செய்தார். காரணம் இமான் நகைச்சுவைக்கு குலுங்கி விழுந்து சிரித்தது தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறினார். அப்போது பிக்பாஸ் இடைமறித்து, “மக்களுக்கு சுவாரஸ்யம் இருக்கா இல்லையா என்பதுதான் கேள்வி அபிஷேக்” என்று அறிவுத்துகிறார்.
இதற்கு பதிலளித்த அபிஷேக், “இமான் தன்னுடைய கதைகளை பேசுகிறார். ஆனால் அதில் சுவாரஸ்யம் இல்லை என்று படுகிறது. வெளியிலும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று சொல்லி இமான் அண்ணாச்சியை நாமினேட் செய்கிறார். பலரும் சுருதியை சுவாரசியமற்றவர்கள் என்கிற லிஸ்டில் நாமினேட் செய்தனர்.