பிக்பாஸ் நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர்.
போகப்போக, ஒவ்வொரு போட்டியாளராக ஒவ்வொரு வாரமும் வெளியேறினர். நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதை அடுத்து, பிரபல ‘மலேசிய’ மாடலான நாடியா சாங் அதிகாரப்பூர்வ எலிமினேஷனாக அறிவிக்கப்பட்டார்.
எலிமினேஷன்கள்
அவரைத் தொடர்ந்து யூடியூபர் அபிஷேக், அடுத்த வரத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு உள்ளிட்டோர் வெளியேறினர். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு, பொழுது போக்கு அம்சங்களுடன், வலுவான டாஸ்குகளும் குறைவில்லாமல் வழங்கப்பட்டன.
அந்த வகையில் அடுத்தடுத்த வாரங்களில் சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பிக்பாஸ் வீட்டில் உள்ளார். இதேபோல் கடந்த வாரங்களில் சஞ்சீவ், அக்ஷரா, வருண் ஆகியோர் வெளியேறினர்.
தாமரை வெளியேற்றம்
இந்நிலையில் 98வது நாளில் தாமரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டார். நாடகக் கலைஞராக புகழ்பெற்ற தாமரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தவரை ஏகோபித்த ரசிகர்களின் இதயம் வென்றார்.
தாமரையின் கதை
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் தாமரை கதை சொல்லும்போது, தான் பிறந்து வளர்ந்த கதை, குடும்ப கஷ்டத்தால் நாடகக் கலையில் இணந்தது, ஒரு நாடகத்துக்கு 200 ரூபாய் வீதம் சம்பளம் பெற்றது, ஒரு திருமண உறவு முறிந்தது, பின்னர் நடந்த கொடுமைகள், அதன் பின்னர் பார்த்தசாரதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது என அனைத்தையும் பகிர்ந்தார்.
நாடக உலகத்திற்கே பெருமை
இதேபோல், “நான் வந்தால் நாடக உலகத்திற்கே பெருமையாக இருக்கும் அனைவரும் என்னை அறிந்து கொள்வார்கள் என்று நண்பர்கள் கூறினர். பிக்பாஸ் வந்தால் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று சொன்னார்கள்.” என்று கூறியிருந்த தாமரை, “சிறுவயதில் என்னால் விளையாட கூட முடியாது. ஆசைப்பட்டதை சாப்பிட முடியாது. இங்கு வந்துதான் நன்றாக சாப்பிட்டேன். சந்தோஷமாக இருந்தேன்” என்றும் பிக்பாஸ் வீட்டில் தான் நன்றாக உண்டு உறங்கி, நட்பை சம்பாதித்து சந்தோஷமாக இருப்பதாகவும் அவ்வப்போது கூறிவந்தார்.
இடையில் தாமரையின் மகனும், கணவர் பார்த்தசாரதியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றனர். முன்னதாக, “என் பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக தான் என் வாழ்க்கையே. இந்த நாடகக் கலையை அழிய விடக்கூடாது என்பதுதான் என் ஆசை. கனவு .எல்லாமே. நன்றி” என்று தாமரை தெரிவித்திருந்தார்.
என்னை வாழவெச்ச வீடு
இந்நிலையில் தாமரை வெளியேறும்போது, “நான் ஜெயிச்சுட்டேன்” என கூறியதுடன், “என்னை வாழவெச்ச வீடு” என சொல்லி அழுதுகொண்டே அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு வெளிசென்றார்.
அவருக்கு பிக்பாஸூம் வாழ்த்துக்கள் கூறினார். போகும் முன், நிரூப்,‘போக மாட்டேன் என உரக்க சொல்லிவிட்டு போ’ என்றதும், தாமரை அவ்வாறே கத்தி கூறிவிட்டு வெளியே சென்றார்.