பிக்பாஸ் வீட்டுக்குள் 5 வது சீசனில் முதல் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. இதில் வெளியேற்றப்பட்டவர் நாடியா சாங்.
மலேசிய தமிழரான இவர் தன்னுடைய தாயாரின் துன்புறுத்தல், தாயார் சொல்லி போலீசார் தன்னை அடித்தது என பல்வேறு விஷயங்களை பகிர்ந்ததுடன், மிக இளம் வயதில் ஹோட்டலில் வேலை பார்த்த தன்னை, தன்னுடைய கணவர் திருமணம் செய்து கொண்டதை அடுத்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பிறகு தன்னுடைய வாழ்க்கை மிகப் பெரிய அலுவலகத்தில் வேலை செய்து நிறைய சம்பாதிக்கும் அளவுக்கு மாறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அண்மையில் மலேசியாவில் இருந்து தமிழர் ஒருவர் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நாடியா சொல்வதெல்லாம் பொய்.. அவர் சொல்வதெல்லாம் நம்புவது போல் இல்லை. எந்த வீட்டில் தாயார் இப்படி கொடுமை படுத்துவார்? மலேசிய போலீசார் பற்றி இப்படி அவதூறாக பேசுகிறார் நாடியா?
ஆண்களை அழைத்துச் சென்றாலே மரியாதையாக ட்ரீட் பண்ணுபவர்கள் மலேசிய போலீசார். அவர்கள் இப்படி ஒரு பெண்ணை ட்ரீட் செய்தார்களா? சிறுவயது என்றாலே வேலை கொடுக்க மாட்டார்கள்.. அதுவும் மலேசிய ஹோட்டல்களில் எப்படி வேலை கிடைக்கும்? சரியாகப் படிக்காமல் கல்விப் பின்புலம் இல்லாமல் கஷ்டப்பட்ட நாடியா எப்படி ஒரு வெளிநாட்டு அலுவலகத்தில் வேலை செய்து கைநிறைய சம்பாதிக்க முடியும்? என்றெல்லாம் கேள்விகளை தொகுத்து, நாடியா பேசுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை!” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் நாடியா சாங், பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் மலேசியத் தமிழர் ஒருவரின் பரபரப்பான அந்த வீடியோ பற்றி 'Fatman' ரவீந்தர் கேள்வி கேட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளித்த நாடியா சாங், “என் கதை எனக்கு தெரியும்.. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது கண்டிப்பாக தெரியாது.. இப்படிப் பேசுபவர்கள் கூட எனக்கு தெரியாதவர்களாகவும், என்னிடம் எந்த வித அளவிலும் தொடர்பில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். என்னை சார்ந்தவர்களும், என்னை தெரிந்தவர்களும் என யாருமே இப்படி பேசுவது இல்லை.
ஏனென்றால் என்னை சுற்றி இருந்தவர்களுக்கு என்ன விஷயங்கள் என்பது முழுமையாகத் தெரியும். தெரியாதவர்கள் பேசும் விஷயங்களுக்கு என்ன சொல்வது.. நாடியா ஒரு நதி மாதிரி, அவர் அப்படியே போய்க்கொண்டே இருப்பார், அவ்வளவுதான்!” என்றதும் ரவீந்தர், “நீங்கள் அபிஷேக் சொன்னது போல் மாஸ் தான்!” என்று குறிப்பிட்டு சிரிக்கிறார்.
தொடர்ந்து பேசிய ரவீந்தர், “மலேசிய மக்கள், மலேசியத் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் பெருமைப்படும் அளவுக்கு தான் நீங்கள் விளையாண்டீர்கள்!” என தம்முடைய கருத்தை தெரிவித்து பாராட்டி வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
Also Read: வெடித்ததா பிரச்சனை? Task-ன் போது நடந்த அண்ணாச்சி மற்றும் வருண், அபினய் மோதல்?