நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை மூலம் அறிமுகமானவர் கவின். இதையடுத்து இவர் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் உலகம் முழுவதிலும் பிரபலமானார். இவர் தற்போது லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ''இந்த மாதிரியான கஷ்டமான நேரங்களில், நமக்கும், நமக்கு நெருக்கமானவர்களுக்கும் எதுவும் ஆகிவிட கூடாது என பயம் கொள்வோம். அந்த பயம் நல்லது தான். அது நம்முடன் தொடர்ந்து இருக்க வேண்டும். அதே சமயம் தேவையில்லாத பதட்டமும் கூடாது. இதுபோன்ற நேரங்களில் நாம் ஒன்றாக பலமுறை நின்றிருக்கிறோம். அதே போல ஒன்றுப்பட்டு, வீட்டில் இருக்க வேண்டும். நமக்காக உழைக்கும் அத்தனை போராளிகளையும் நேசிப்போம், அவர்களை நினைவில் கொள்வோம்'' என தெரிவித்துள்ளார்.