ஏலே பட வெளியீடு தொடர்பாக எழுந்த சிக்கலை அடுத்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில்லுக்கருப்பட்டி திரைப்பட இயக்குநர் ஹலீதா ஷமீம் அடுத்ததாக எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஏலே. விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி மற்றும் Y Not தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பட வெளியீடு தொடர்பாக எழுந்த சிக்கலை அடுத்து இது தொடர்பாக பாரதிராஜா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா கால சிரமங்களை எல்லாம் எதிர்கொள்வதற்கு முன்னதாகவே திரையரங்குகள் தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து இன்னல்களை அடுக்கி வருகிறது. கடந்த 4 வருடங்களாக VPF, Transparency, TMC, Convenience fee என பல்வேறு காரணங்களுக்காக போராடி வரும் நிலையில் ஒன்றிலும் தீர்வு எட்டப்படவில்லை. திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்க தயாரிக்கப்படுகின்றன. திரையரங்குகளுக்கு இரையாவதற்கு அல்ல.
இதனிடையே OTT மூலம் படங்கள் மக்களை நேரடியாக சென்றடையும் நிலை உருவானதால் உண்மையில் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சடைந்தனர். கடன்சுமைகளைத் தவிர்க்க சில படங்கள் ஓடிடிகளில் வெளியிட்ட பொழுது தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி உண்டானது. இதற்கும் திரையரங்குகள் அபயக் கூக்குரல் எழுப்பின. அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிடைத்தும், திரையரங்கங்களையே தேர்ந்தெடுத்தன. உடனே அவர்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி தெரிவித்து தெய்வம் என்று கூறினர். எல்லோருக்கும் லாபம் என்றவுடன் மகிழ்ந்த ஒரு தயாரிப்பாளர் தம், நஷ்டத்தைப் போக்க, 14 -வது நாள் OTT-ல் படத்தை வெளியிட முடிவு செய்தார். ஆனால் மறுநிமிடமே, அவரை வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். இப்படி ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக்கடித்த கதையை நேரில் கண்டோம்.
இந்நிலையில் வரும் 12 – ஆம் தேதி, “ஏலே” திரைப்படத் தயாரிப்பாளர் தன்னை மட்டும் காக்க நினைக்காமல், திரையரங்குகளும் வாழ வேண்டும் என்கிற நோக்கில், கோடி ரூபாய் வரை செலவு செய்து படத்தை ரிலீஸ் செய்ய முயல்கிறார். திரையரங்குகளோ, நாங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், தவிர்த்துவிட்டு 30 நாட்கள் வரை தயாரிப்பாளர்கள் OTT-ல் படத்தை வெளியிடமாட்டேன் என கடிதம் கொடுத்தால் மட்டும் தான் படங்களை வெளியிடுவோம் என தன்னிச்சையாக முடிவெடுத்து எல்லாருக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்க வேண்டாம்.
We reached an agreement with @qubecinema and TN Theatres and Multiplex association to allow Tamil movies release till March 31st 2021. It's movie time at Theatres 👍👍👍 pic.twitter.com/7elffLRwi5
— TFAPATN (@tfapatn) November 18, 2020
தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்பதை உங்களுக்கு நியாபகப்படுத்துகிறோம். யார் தடுத்தாலும் “ஏலே” திரைப்படம் மக்களை சென்றடையும். வெற்றியும் பெறும். திரையரங்குகளின் எதேச்சதிகாரத்தை தவிர்த்தால்தான் கலைத்துறை மீளும் என்றால் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அதை துரிதப்படுத்த தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) செயல்படும். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதே சினிமாவை வாழ வைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.