பிரபலங்களின் பாராட்டில் “ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் !
இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கத்தில், ஸ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P ரங்கநாதன் தயாரிப்பில், நடிகர் கௌதம் கார்த்திக்-சேரன் இணைந்து நடித்துள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் தமிழ் திரையுலக பிரபலங்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஆரி, நடிகர் கலையரசன் ஆகியோர் படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்தினர்.
இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது…
பொதுவாகவே ஒரு படம் பார்த்தால் அதைப் பாராட்டி கூற வேண்டும், ஆனால் சில படங்களை மட்டும் தான், மனதாரா நாம் பாராட்டுவோம். சமீப காலமாக தமிழ் சினிமாவில் டெக்னிகலாக பிரமாண்டமான படங்கள் வருகிறது, ஆனால் பாசத்தையும், நேசத்தையும் சொல்வதற்கான படங்கள் வருவதே இல்லை. பல காலம் கழித்து நம் உறவுகளின் கதையை இந்தப்படம் சொல்கிறது. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பே அழகாக இருக்கிறது. குடும்பம் சில உறவுகளால் சிக்கலுக்குள்ளாகும் உறவும் பந்தமும் மீண்டும் ஒன்று சேரும், இதை நுணுக்கமாக தன் திரைக்கதையால் அழகாக சொல்லியிருக்கிறான் இயக்குநர் நந்தா பெரியசாமி. சேரன் எப்போதும் என்னுடைய பிரதிபலிப்பு, என்னுடைய சினிமாவை எடுப்பவன். இந்தப்படத்தில் ஒரு குடும்பத்தை தாங்கும் மூத்தவனாக அருமையாக செய்திருகிறான். முழுப்படத்தையும் தூக்கி சுமந்த்திருக்கிறான். நானே இயக்குநர் என்றாலும், அவனது நடிப்பு என்னையே சில இடங்களில் கண்கலங்க வைத்துவிட்டது. உணர்வுகளால் கட்டிப்போட்டு விட்டான். சரவணன் அழகான கலைஞன், மூத்த அண்ணனாக அற்புதமாக நடித்திருக்கிறான். நிறைய கதாப்பாத்திரங்கள் நிறைய நட்சத்திரங்கள், எல்லோரையும் வைத்து படம் எடுப்பது கஷ்டம், ஜோ மல்லூரி முதற்கொண்டு, எல்லோரும் அழகாக நடித்திருக்கிறார்கள். பல காலம் கழித்து ஒரு அழகான குடும்ப படம். இந்த வாழ்க்கையை வாழ்ந்தவனால் தான் இப்படிப்பட்ட கதையை சொல்ல வேண்டும் அதை மிக அற்புதமாக செய்திருக்கிறான் நந்தா பெரியசாமி. கௌதம் கார்த்திக் மிக அழகாக நடித்துள்ளான். பிரிந்திருக்கும் உறவுகள் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக கண்ணீர் சிந்துவார்கள், உருகுவார்கள். தமிழ் உறவு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாக இந்தப்படம் உள்ளது. இந்தப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் ஆரி படம் குறித்து கூறியதாவது…
நந்தா பெரியசாமி சார் இயக்கத்தில் சேரன் சார் நடித்துள்ள குடும்ப படம். சேரன் சார் நடித்தாலே, நல்ல குடும்ப படமாக இருக்கும் என்று தான் இப்படத்தை பார்க்க வந்தேன். இது உணர்வூப்பூர்வமான படமாக இருந்தது. இன்று நாம் ஓடிடியில் நிறைய படங்கள் பார்க்கிறோம், டெக்னாலஜியில் வளர்ந்த படங்கள் பார்க்கிறோம், எவ்வளவு டெக்னாலஜி வளர்ந்தாலும் உறவுகளுக்குள் மாறாத ஒரு விசயம் அன்பு. நம் குடும்பத்திற்குள் உறவுகளுக்குள் நான் சகிப்புதன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், அன்பை நாம் எப்படி பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று இந்தப்படம் சொல்கிறது. மனிதன் பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் வாழும் வாழ்க்கையை படம்பிடிப்பதும், அன்பை சொல்வதுமான படங்கள் வருவது குறைந்துள்ளது, அதனை இந்தப்படம் நிறைவேற்றியுள்ளது. சேரன் என்னுடைய ஆட்டோகிராஃப்பிற்கு அவர்தான் காரணம் நான் சினிமாவில் வர அவர் தான் காரணம், இந்தப்படத்தை தன் தோளில் தாங்கியிருக்கிறார். கௌதம் கார்த்திக் அழகாக செய்துள்ளார். சரவணன் சாருக்கும், சேரன் சாருக்கும் உள்ள உறவு அழகாக காட்டப்பட்டிருந்தது. குற்றம் பார்ப்பின் சுற்றம் இல்லை இதை தான் இந்தப்படம் சொல்கிறது. உறவுகளுக்காக, உறவுகளை நம்பி இந்தப்படம் ஒரு அழுத்தமான படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் உழைத்த மொத்த கலைஞர்களுக்கும் நடிகர்களுக்கும் என் வாழ்த்துகள்
நடிகர் கலையரசன் படம் குறித்து கூறியதாவது…
உறவுகளின் மதிப்பை சொல்லக்கூடிய ஒரு அழகான படம், நீண்ட நாள் கழித்து ஒரு அழகான குடும்பபடம். குடும்பம் எனும் போது அதற்குள் சந்தோஷமும் இருக்கும், பிரச்சனைகளும் இருக்கும், எல்லோரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டார்கள். அம்மாதிரி மிகவும் உண்ரவுபூர்வமான தருணங்களை, மிக அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அப்படியே கிராமத்து மனிதர்களை பிரதிபலித்திருக்கிறார்கள். கேமரா மியூசிக் எல்லாமே நன்றாக இருந்தது. எல்லோருமே சூப்பராக செய்துள்ளார்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அனைவரும் கண்டிப்பாக இப்படம் பாருங்கள்.