பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பிரபல ‘விஜய் சேதுபதி’ திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் வெங்கட் என்கிற வெங்கடேஷ்.
‘செல்லமடி நீ எனக்கு’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திரைப்பட நடிகர் வெங்கட். இதனைத் தொடர்ந்து உறவுகள், சங்கமம், ஈரமான ரோஜாவே உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்திருந்த நடிகர் வெங்கட், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சின்னத்திரை ரசிகர்களையும் திரைப்பட உலகத்தினரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது அவரது மறைவு.
விஜய் டிவியின் சென்சேஷனல் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’வில், பாரதியாக நடிகர் அருண் பிரசாத், கண்ணம்மாவாக நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கண்ணம்மா மற்றும் அஞ்சலி ஆகியோரின் தந்தையாக சண்முகம் என்கிற கேரக்டரில் நடித்து வந்தார் நடிகர் வெங்கட்.
இதனிடையே, ‘பாரதி கண்ணம்மா’ சிரீயலில், கண்ணம்மாவின் தந்தை கேரக்டர் காட்டப்படாமலே கதை நகர்ந்து வந்தது. இந்த நிலையில் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா, குழந்தை ஹேமாவை தேடிக்கொண்டி வரும்போது வழியில் எதார்த்தமாக தன் தந்தை சண்முகத்தை பார்க்கிறார். அந்த இடத்தில் தான், மறைந்த நடிகர் வெங்கட் அவர்களுக்கு பதிலாக, புதிய நடிகர் ஒருவர் தோன்றுகிறார்.
இவர் யாரென்று, நாம் பாரதி கண்ணம்மா இயக்குநர் திரு. பிரவீன் பென்னட் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டறிந்த போது, தற்போது கண்ணம்மாவின் தந்தையாக நடித்து வருபவரின் பெயர் வைரவ ராஜன் என்று தெரிவித்தார். மேலும், கண்ணம்மாவுக்கு தந்தையாக இதற்கு முன்வரை நடித்தவரும், மறைந்த நடிகருமான வெங்கட் என்கிற வெங்கடேஷ் அவர்களுக்கு குரல் கொடுத்தவர்தான், இந்த வைரவ ராஜன் என்கிற தகவலையும் பிரவீன் பென்னட் அவர்கள் நம்மிடையே பகிர்ந்தார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.