விஜய் டிவி, 24, பிப்ரவரி 2022: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒரு சீரியல் பாரதி கண்ணம்மா.
பாரதி கண்ணம்மா
இந்த சீரியலில் கணவன் மனைவியான பாரதி கண்ணம்மா இருவரும் பாரதியின் சந்தேகத்தின் காரணமாக பிரிந்து இதுவரை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என கோர்ட் சொன்னது. ஆனாலும் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழாமல் தனியே சென்று விட்டார்.
குழந்தைகள்..
ஆனால் பாரதி மற்றும் கண்ணம்மா இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகளான லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோரில், லட்சுமி கண்ணம்மாவிடமும், குழந்தை ஹேமா பாரதியிடமும் வளர்ந்து வருகின்றனர். ஆனால் பாரதியைப் பொறுத்தவரை, ஹேமா தத்துப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த உண்மையை தற்போது தான் கண்ணம்மா பாரதியிடம் கூறினார்.
நம்ப மறுத்த பாரதி..
ஆனால் பாரதியோ கண்ணம்மா பொய் கூறுவதாக நினைத்துக் கொண்டு, அதாவது தன் குழந்தை ஹேமாவை தன்னிடமிருந்து பிரிப்பதற்காக கண்ணம்மா இவ்வாறு பொய் கூறுகிறார் என்று நினைத்துக்கொண்டு கண்ணம்மாவை கலாய்த்து அனுப்பிவிட்டார்.
கண்ணம்மாவின் மாமியார்
இது எல்லாத்துக்கும் காரணம் கண்ணம்மாவின் மாமியார்தான். அவர்தான் ஹேமாவை தத்துப்பிள்ளை என்று சொல்லி பாரதியிடம் கொடுத்துவிட்டார். ஒருவேளை அவர் பொய் கூறி இருந்தால் அவரையும் தான் வெறுத்து விடுவேன் என்று பாரதி கூறியதால் கண்ணம்மா மேற்கொண்டு பாரதியிடம் இது குறித்து பேசாமல் நிறுத்திக்கொண்டார்.
மாமியாரின் மன்னிப்பு
அதே சமயம் தன் மாமியார் தான் காரணம் என்று புரிந்து கொண்ட கண்ணம்மா, மாமியாரையும் வறுத்தெடுக்க தவறவில்லை. கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யாவோ, “நான் வேறு எண்ணத்தில் இதைச் செய்தேன். இப்படி வந்து முடியும் என்று நினைக்கவில்லை .. என்னை மன்னித்துவிடு கண்ணம்மா!” என்று புலம்பினார்.
உடைத்த கண்ணம்மா
இதனிடையே கண்ணம்மா, குழந்தை லட்சுமியிடம், அவளது அப்பா யார் என்று தன் பிறந்த நாள் விழாவில் சொல்வதாக கண்ணம்மா வாக்கு கொடுத்திருந்தார். அந்த பிறந்தநாளில் தான் இவ்வளவு கலவரங்களும் நடந்தன. எனினும் கேக் வெட்டும் முன்பு கண்ணம்மாவிடம் ஹேமா பேசும்போது, “லட்சுமியிடம் அவளுடைய அப்பா யாரென்று சொல்லுங்கள் அவள் ஆர்வமாக காத்திருக்கிறாள்.. அதைச் சொல்லிவிட்டு கேக் வெட்டுங்கள்!” என்று கூறுகிறாள்.
சில விஷயங்களை யோசித்து பார்த்த கண்ணம்மா ஒருவழியாக, லட்சுமியிடம், “இதோ இங்கு நிற்கிறாரே பாரதி... அங்கிள் அங்கிள் என்று அழைப்பாயே பாரதி... நீ தினமும் பார்த்து பேசுவாயே பாரதி... அவர் தான் உன் அப்பா.. இத்தனை நாள் உன் அப்பா யார் யார்? என்று ஏங்குவாயே... அந்த அப்பா இவர்தான்! இனி அவரை வாய் நிறைய அப்பா என கூப்பிடு!” என்று லட்சுமியிடம் போட்டு உடைத்துவிட்டார்.
கனவா? நிஜமா?
எனினும் இவையெல்லாம் கனவாய் கூட இருக்கலாம் என ரசிகர்கள் கருதி வருகின்றனர் காரணம் முன்பொரு ப்ரோமோவில் லட்சுமியை சமாதானப்படுத்தும் பாரதி, “உன் அம்மா, அப்பா எல்லாமுமே உனக்கு உன் அம்மா தான்” என கூற, ஓடிச்சென்று அம்மாவை கட்டிக்கொண்டு லட்சுமி அழுவதாய் அமைந்தது. அப்படி இருக்க, கண்ணம்மா எப்படி லட்சுமியிடம் இப்படி, “பாரதி தான் உன் அப்பா” என போட்டு உடைப்பார்? எனவே இது கனவா இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.