டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் man vs wild நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு நம்மூரில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மனிதர்கள் வாழ கடினமானதாக இருக்கும் காட்டுப்பகுதியில், உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்களை கண்டறியும் சாகசமே இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு.
பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து, இன் டு த வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் காட்டு பகுதியில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. மேலும் இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்பதால் ரசிகர்களின் கூடுதல் கவனத்தைப் பெற்று வருகிறது. கவிதாலயா நிறுவனம் இதன் தமிழ் வெர்ஷனை வெளியிடுகிறார்கள்.
இந்நிலையில் 23 மார்ச் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியின் ஸ்னீக் பீக் சமீபத்தில் வெளியானது. இதில் பியர் கிரில்ஸ் ரஜினியிடம் நீர் மேலாண்மையைப் பற்றி கூற, இந்தியாவில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை அதுதான் என்று பதில் அளிக்கிறார். அது இருக்கட்டும் ரஜினி, இப்போது இந்த ஆறை நாம் கடக்க வேண்டும் என்று பியர் கூற, ரஜினி தயாராகிறார். இரும்புப் பாலத்தைப் பிடித்தபடி நிஜ சாகஸத்தில் ரஜினியும் பியர்ஸும் ஈடுபட சினிமா படக் காட்சியை மிஞ்சிவிட்டது அது.
பத்திரமாக அந்தப் பாலத்தை கடந்ததும், பியர்ஸ் ரஜினியிடம் நீங்கள் 18, 19 வயதில் என்ன வேலை செய்தீர்கள் என்று கேட்க, ரஜினி நான் பஸ் கண்டக்டராக இருந்தேன் என்று கூறினார். அதன் பின்னர் தன் திரைப் பயணத்தைப் பற்றியும், வாழ்க்கை குறித்தும் ஜீப்பில் பியர்ஸுடன் பயணித்தபடி மனம் திறந்து சில விஷயங்களைப் பேசினார் ரஜினி.
ஒரு போதும் புகழ் தன் தலைக்குள் ஏறிவிடாதபடி பார்த்துக் கொள்வேன். என் நிஜப்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். பிறகு ரஜினி காந்தை மறந்துவிடுவேன், நடித்தவுடன் அந்த வேலை முடிந்துவிடும். சிவாஜி ராவாக மாறிவிடுவேன். சினிமா எனக்கு தொழில் மட்டும்தான். யாராவது நீங்கள் ரஜினிகாந்தா என்று கேட்கும்போது, ஆமாம் நான் ரஜினிதான் என்று சொல்வேன்’ என்று கூறினார். மேலும் ஒரு காட்சியில் பியர் ரஜினியின் வயது என்ன என்று கேட்க, அதற்கு அவர் 70 என்று கூறுகிறார். அதைக் கேட்டு வியப்படைந்த பியர்ஸ் நீங்கள் எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று மனம் திறந்து பாராட்டினார்.
ரஜினி ரசிகர்களுக்கிடையே மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் இந்த விடியோ வைரலாக வலம் வருகிறது.