விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டு வரும் பிரபல சீரியல் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் தற்போது முக்கியமான கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
கதைப்படி எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த பாரதி - கண்ணம்மா உறவில் 'வெண்பா' என்னும் வில்லி உருவாக்கிய சிக்கலால் கண்ணம்மாவை, பாரதி சந்தேகப்பட, கண்ணம்மாவும் பாரதியும் பிரிந்தனர். அதன்பின்னர் கண்ணம்மாவுக்கு பிறந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தை பாரதியிடம் 'ஹேமா' என்கிற பெயரிலும், இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடம் 'லக்ஷ்மி' என்கிற பெயரிலும் வளர்கிறார்கள்.
ALSO READ: “ஹேமா இங்க தான் இருந்தாளாம்!”… கலாய்த்து தள்ளிய பாரதி கண்ணம்மா ‘அஞ்சலி’! ViralVideo
தற்போது இந்த குழந்தைகளுக்கு 8 வயது ஆகிவிட்டது. இந்த விஷயங்கள் எல்லாம் சௌந்தர்யா, அவருடைய கணவர் மற்றும் அகிலன், அஞ்சலி ஆகியோருக்கு மட்டுமே தெரியும். கண்ணம்மாவுக்கு பாரதியிடம் வளரும் ஹேமா தன் குழந்தை என்று தெரியாது. பாரதிக்கு கண்ணம்மாவிடம் வளரும் லக்ஷ்மியை ஒரு ஆளாக தெரியும். அது கண்ணம்மாவிடம் வளரும் குழந்தை என்றே தெரியாது. தெரிந்தாலும் கண்ணம்மாவின் குழந்தையை தன் குழந்தை அல்ல என்று சொல்வதுதான் அவருடைய தீராத பிரச்சனை.
கண்ணம்மாவையும் லக்ஷ்மியையும் பொருத்தவரை, பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் ஆகி, அவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ஹேமா என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தான் லக்ஷ்மி - பாரதி இருவரும் பாசத்துடன் பழகி கொண்டிருக்கின்றனர். இதேபோல் ஹேமா - கண்ணம்மா இருவரும் பாசத்துடன் பழகி கொண்டிருக்கின்றனர். ஹேமாவை பொறுத்தவரை கண்ணம்மாவை ஒரு சமையல் அம்மாவாகதான் தெரியும். ஹேமாவுக்கு கண்ணம்மா, லட்சுமியின் அம்மா என்பது தெரியாது.
இவ்வளவு முடிச்சுக்கள் எப்போது அவிழும் என்கிற சுவாரஸ்யத்துடன் ரசிகர்கள் தினம் தினம் இந்த தொடரை பார்த்து வரும் சூழ்நிலையில், ஹேமாவை வெண்பா, கூலிப்படை மூலம் கடத்தி அடைத்து வைக்க, பாரதி முதல் ஆளாக கண்ணம்மாவை சந்தேகப்பட்டு கண்ணம்மாவின் மீது புகார் கொடுத்திருந்தார்.
இதனை அடுத்து கண்ணம்மா போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட அங்கு வந்த சவுந்தர்யா கண்ணம்மாவை பெயிலில் எடுத்தார். இதனால் பாரதி மிகவும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் ஆளுக்கு ஒரு புறம் ஹேமாவை தேட, ஹேமா கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பித்து ஓட, ஹேமாவை கண்ணம்மா கண்டுபிடித்து கடத்தல் காரர்களிடமிருந்து சண்டையிட்டு மீட்கிறார். அப்போது கண்ணம்மாவுக்கு காயங்கள் ஏற்பட்டு விடுகின்றன.
அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமா. தனக்கு என்ன நடந்தது என்பதை தனக்கு தெரிந்த வரை கூற, அப்போதுதான் பாரதி, ஹேமாவை கண்ணம்மா கடத்தவில்லை என்பதையும், அதேபோல்தான் ஹேமாவை கண்ணம்மா காப்பாற்றி தான் இருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்கிறான். இதன் பிறகு சௌந்தர்யாவும் பாரதியின் அப்பாவும், பாரதிக்கு அறிவுரைகளைக் கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
இதனால் பாரதி மனம் மாறி இருக்க வேண்டும். குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருக்கவேண்டும். கண்ணம்மாவுக்கு நன்றி சொல்வதை தவிர்த்து விட்டு அவரை திட்டி தீர்த்திருக்க வேண்டியதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்க வேண்டும். இதன் விளைவுதான் தற்போது வந்திருக்கும் புதிய புரோமோ. இந்த புரோமவில் பாரதி தன் குழந்தை ஹேமாவுடன் கண்ணம்மா வீட்டுக்கு என்ட்ரி கொடுக்கிறார். இதை பார்த்த கண்ணம்மா ஷாக் ஆகி நிற்கிறார்.
அப்போது ஹேமா, இருவரையும் பேச விட்டு விட்டு நகர்கிறார், இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி இந்த புரோமோவில் இடம் பெற்று இருக்கிறது. அதில் பாரதி, கண்ணம்மாவிடம் தன்னுயிர் போன்றவள் ஹேமா... அவரை காப்பாற்றியதற்கு நன்றி என்று கூறுகிறான். இப்படி மிக நீண்ட நாட்களாக கனியாமல் இருந்த பாரதி - கண்ணம்மா உறவு, தற்போது மீண்டும் கனிய தொடங்கியிருப்பதால் ரசிகர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.
இந்த புரோமோவில் ஜூலை 3-ஆம் தேதி வரை இடம்பெறும் காட்சிகள் வருவதால், கண்ணம்மாவின் வீட்டுக்கு பாரதி செல்லும் இந்த காட்சியை காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இன்னும் பலர், “இதற்கு எதற்கு பாரதி கண்ணம்மாவை அந்த பேச்சு பேசினாய்? அதுவும் கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினாய்” என்றும், “ஆமா.. பாரதி என்று ஒரு மானஸ்தன் இருந்தானே? அவனா இப்படி இப்போது கண்ணம்மா வீட்டுக்கு சென்று நன்றி கூறுகிறான்!” என்றெல்லாம் கூறிவருகின்றனர்.