விஜய் டிவி தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது மிக மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.
அந்த வகையில், சமீபத்தில் அரங்கேறிய ஒரு விஷயம், உச்சகட்ட எதிர்பார்ப்பை மட்டுமில்லாமல் கடும் பரபரப்பிலும் பார்வையாளர்களை ஆழ்த்தி உள்ளது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பணிபுரிந்து வரும் மருத்துவமனையை சில தீவிரவாதிகள் இணைந்து Hijack செய்து வைத்துள்ளனர். தீவிரவாதிகள் பிடியில் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவரும் சிக்கிக் கொள்வதால், பாரதி கண்ணம்மா தொடரில் உச்சகட்ட பதற்றம் தான். அதிலும், பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோரின் குழந்தைகளான லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோரும் சிக்கிக் கொண்டுள்ளது பார்வையாளர்கள் மத்தியில் இன்னும் அதிக தவிப்பை உருவாக்கி உள்ளது.
மறுபக்கம், தீவிரவாதிகளிடம் இருந்து எப்படியாவது தப்பித்துச் சென்று விட வேண்டும் என்பதிலும் உள்ளே சிக்கி இருப்பவர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது அரங்கேறியுள்ள சம்பவம் ஒன்று, தீவிரவாதிகளின் கடத்தல் மத்தியில் மிகப் பெரிய ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ளவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தீவிரவாதிகளில் ஒருவர், அங்குள்ள பெண்களிடம் அத்துமீறி செயல்பட்டு வருகிறார். அப்படி ஒரு சூழ்நிலையில், கண்ணம்மாவையும் அந்த தீவிரவாதி தனியாக அழைத்து செல்கிறார். அவரிடம் தவறாக நடக்க முயலும் சமயத்தில் பொங்கி எழும் கண்ணம்மா, அங்கிருக்கும் கத்திரிக்கோலால் அந்த தீவிரவாதியை சரமாரியாக குத்தவே அவனும் சரிந்து விழுகிறான்.
ஏதோ அம்மன் அவதாரம் எடுத்தது போல கண்ணம்மா ஆக்ரோஷத்துடன் நிற்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கண்ணம்மா என்றாலே கொஞ்சம் அமைதி கலந்த படி இருக்கும் வேளையில், ஒரு படி மேலே போய் அநீதிக்கு எதிராக கொலை செய்வது வரை சென்ற கண்ணம்மாவை ஒரு நிமிடம் அனைவரும் மிரண்டு போய் தான் பார்த்து வருகின்றனர்.