தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் மரக்கார் படத்தில் நடித்துள்ளார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து முதலில் அரபிக்கடலில் கடற்படையை உருவாக்கிய மரக்காரின் உண்மைக்கதையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் மலையாள சினிமாவில் அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி உள்ளது. 67 வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக ’மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ ஜூரிகளால் தோ்வு செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சிறந்த படம், சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஆடை வடிவமைப்பு என மூன்று தேசிய விருதுகளை வென்றது. இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் மோகன்லால், அர்ஜூன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பரியதர்ஷன், ஃபாசில், சித்திக், மறைந்த நடிகர் நெடுமுடி வேணு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படம் 02.12.2021 அன்று உலகம் முழுவதும் திரயரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் மோகன்லால் தனது டிவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பே அறிவித்துள்ளார். இந்நிலையில் இதே நாளில் போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா' தெலுங்கு படமும் வெளியாக உள்ளது. ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ என தெலுங்கு சினிமாவில் இந்தக்கூட்டணி மிகப்பெரிய வெற்றிப்படங்களை ஏற்கனவே கொடுத்துள்ளது.
இதனால் தெலுங்கு மசாலா பட பிரியர்களுக்கு அகண்டா திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மிர்யாலா ரவீந்தர் ரெட்டியின் துவாராகா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. டிசம்பர் 2ல் தென்னிந்தியாவின் மூத்த நடிகர்கள் படம் ஒரே நாய் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
மேலும் மோகன் லாலின் மரக்கார் படம் ஆந்திரா- தெலுங்கானாவிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.