நடிகை மீனா தென்னிந்திய திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர்.
நடிகை மீனா, சிவாஜி கணேசன் நடித்த நெஞ்சங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானார். நடிகை மீனா குழந்தை பருவத்திலேயே பல திரைப்படங்களை நடித்திருக்கிறார். பின்னாளில் தமிழைப் பொறுத்தவரை ராஜ்கிரணின் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் சோலையம்மாள் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் திறமான நாயகியாக வேரூன்றினார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்த மீனா, நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இன்றும் திரிஷ்யம் தொடர் வரிசை திரைப்படத்தில் நாயகியாக நடித்துவரும் மீனாவுக்கு அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சார்பில் அவருடைய 40 ஆண்டு கால திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக மீனா 40 என்கிற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதில் நடிகை மீனாவின் மகளான பேபி நைனிகா, நடிகை மீனாவின் சிறு வயது கேரக்டரையும், மீனா ஹீரோயினாக நடித்தபோது பேசிய வசனத்தையும் ரீகிரியேட் செய்து அசத்தினார். இவை இரண்டுமே நடிகை மீனா ரஜினியுடன் நடித்த படங்களில் இடம்பெற்றவை என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
ஆம், முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்தை ஸ்டேஜில் இருந்து, ‘ரஜினி அங்கிள்.. எங்க இருக்கீங்க.. மேடைக்கு வாங்க’ என, அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிகை மீனா, ரஜினியை கத்தி அழைப்பது போல் பேபி நைனிகா அழைத்தார். இதேபோல் ரஜினியும் மீனாவும் ரசிகர்களிடம் பேசி முடித்த பிறகு, பேபி நைனிகா, “அங்கிள் இருக்கி அணைச்சு ஒரு உம்ம தரும்” என முத்து படத்தில் மீனா பேசும் பிரபல வசனத்தை பேசினார்.
உடனே ரஜினியும் நெகிழ்ந்துபோய் பேபி நைனிகாவுக்கு பாசத்துடன் கட்டிக்கொண்டு அன்பு முத்தமிட்டார்.