பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் கலகலப்பாக போட்டியாளர்கள் இருந்து வந்தாலும் டாஸ்க் என வந்து விட்டால் வீடே ரெண்டாகி விடுவது போல பிரச்சனைகளும் புதிது புதிதாக உருவாகிறது.
அந்த வகையில், கோர்ட் டாஸ்க் தற்போது நடந்து வரும் நிலையில், சில பரபரப்பு சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் அரங்கேறி வருகிறது.
புதிய டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொரு வழக்கும் விறுவிறுப்பாக சென்ற வண்ணம் உள்ளது. இதற்கு மத்தியில் சில காரசாரமான விவாதங்கள் கூட அரங்கேறி தான் வருகிறது. அப்படி தான் ADK மீது வழக்கு ஒன்றை அசீம் தொடுக்க, இறுதியில் ராம் அளித்த தீர்ப்பு அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
ராஜாங்கமும், அருங்காட்சியகமும் டாஸ்க்கில் கதிரவன் பூட்டப்பட்டு வைத்திருந்த சங்கிலியின் சாவியை எடுத்து வைத்ததாக அசீம் மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதன் பெயரில், ADK மற்றும் அசீம் இடையே சண்டையும் வெடித்திருந்தது. மிகப் பெரிய அளவில் இருவருக்கும் இடையே நடந்த சண்டை பிக்பாஸ் வீட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
தொடர்ந்து, நீதிமன்ற டாஸ்க்கில் இந்த விவகாரத்தை எடுத்து வந்த அசீம், ராஜாங்கமும் அருங்காட்சியகமும் டாஸ்க்கில் தன் மீது ADK வைத்த குற்றச்சாட்டு அவதூறு என்றும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ADK மீது வழக்கு ஒன்றை தொடுக்கிறார். இதில் அசீமின் வழக்கறிஞராக ஷிவினும், ADKவுக்கு வக்கீலாக விக்ரமனும் செயல்பட்டனர்.
மேலும், காழ்புணர்ச்சி காரணமாக அசீம் மீது சில வார்த்தைகளை ADK பயன்படுத்தினார் என்றும் நீதிபதியாக இருக்கும் ராம் முன்னாள் தங்களின் புகார் காரணத்தை இன்னும் தெளிவுபடுத்துகிறார் ஷிவின். இது தொடர்பாக மாறி மாறி நடைபெறும் விசாரணையில், கதிரவன் கால் வலிக்கும் என்பதால் தான் அதற்கான சாவியைத் தேடி அசீமிடம் முறையிட்டது தொடர்பாகவும் தன்னை Rapper என தனது தொழிலை அசீம் குறிப்பிட்டதன் காரணமாகவும் கோபத்தில் சில வார்த்தைகளை தெரிவித்ததாக ADK இதன் பின்னர் தெரிவிக்கிறார்.
ஆனால், கதிரவனோ தனக்கு கால்கள் வலிக்கவில்லை என்றும் அது குறித்து நான் ADK-விடம் எதுவுமே பேசவில்லை என கூற, "இல்லை அவர் என்னிடம் தெரிவித்தார்" என கதிரவன் கருத்திற்கு ADK மறுப்பும் தெரிவிக்கிறார். கதிரவனுக்கே வலிக்காத போது, மனிதாபினம் உள்ளவர்கள் சாவியை எடுத்து வைக்க மாட்டார்கள் என்று ஏன் ADK கூற வேண்டும் என்றும் ஷிவின் தரப்பில் கருத்துக்களை முன் வைக்க, இந்த வழக்கு சூடு பிடித்தது.
இதனையடுத்து, தான் சாவியை எடுத்து வைத்திருந்தது குறித்து விக்ரமனின் கேள்விக்கு பதில் அளிக்கும் அசீம், சாவி ADK கையில் இருந்தால் என்னால் டாஸ்கை நிறைவேற்ற முடியாது என்றும் தான் சாவியை வைத்திருந்ததால் தான் ரகசிய டாஸ்க்கை முடிக்க முடிந்தது என்றும் குறிப்பிடுகிறார். இப்படி அசீம் - ADK வழக்கில் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வாதம் முடிய, இறுதியில் நீதிபதி ராம் தீர்ப்பு வழங்குகிறார்.
"ADK மன்னிப்பு கேட்க வேண்டும் என அசீம் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இரு தரப்பிலும் வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதால் இருபக்கமும் தவறு நடந்துள்ளது. ஆனால் அசீம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேஸ் தொடர்பான பாயிண்ட்களை மட்டும் வைத்து ராஜாங்கமும், அருங்காட்சியமும் டாஸ்க்கில் அசீம் செய்தது டாஸ்க்கிற்காக மட்டும் தான் என்பதும் நிரூபணம் ஆகிறது" என் ராம் கூறினர். மேலும், Final Verdict என அசீம் - ஷிவின் தரப்பையும் வெற்றி பெற்றதாக ராம் தெரிவித்தார்.