கடந்த 2009 ஆம் ஆண்டு ‘டைட்டானிக்’ பட புகழ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார்.
இதை அடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு அவதார் 2 படத்தை 5 பாகங்களாக எடுக்க போவதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார். அவதார் 2 படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்துடன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி இரண்டாம் பாகமான 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை சென்னை திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்த ரசிகர்கள், “அவதார் என்பது படம் கிடையாது, அது வேறு ஒரு உலகம், அவ்வளவு தொழில்நுட்பத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தை மிரட்டியுள்ளார்கள். கொடுக்கும் பணத்துக்கு இரண்டு மடங்கு வொர்த்தாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக 3டியில் நம்மை அந்த உலகத்துக்கே கொண்டு சென்றுவிடுகிறார்கள்.
இந்த அவதார் பாகத்தை கடலில் முழுமையாக காட்டுகிறார்கள். கதையை பொருத்தவரை முதல் பாகம் அளவுக்கு இல்லையென்றாலும், கொஞ்சம் கணிக்க முடியக் கூடியதாக உள்ளது. அதே சமயம் இந்த இரண்டாம் பாகத்தில் பண்டோராவில் இருந்து வாட்டர் உலகத்துக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் இரண்டு பாகங்களையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒரு அட்வெஞ்சர் உலகம் நம்மை அதனுள் கூட்டிச் செல்கிறது. அவ்வளவு பெரிய விஷூவல் ட்ரீட் படத்தில் இருக்கிறது.
படத்தில் மனிதர்களுக்கும் வேறு உயிரிகளுக்கும் இருக்கும் காட்சிகள் சிலிர்க்க வைத்துள்ளன. திமிங்கலம் உள்ளிட்ட ராட்சத உயிரினங்கள் சாகச விஷூவல் அனுபவத்தை நமக்கு கொடுக்கின்றன. குழந்தைகள் இந்த படத்தை விரும்பிப் பார்ப்பார்கள் என்றாலும், சிலருக்கு இந்த படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டியதாக இருக்கும், அவ்வளவு விஷயங்கள் தாமதமாக புரியலாம், இது வே ஆஃப் வாட்டர் கிடையாது, வே ஆஃப் வேற வேர்ல்டு” என குறிப்பிட்டுள்ளனர்.