தனது மாமாவான இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
டிரம் ஸ்டிக் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யானை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. படத்தின் முதல் லுக் போஸ்டர்களில் ரத்தம் சொட்டும் சங்கும், மலர் மாலையுடன் அருண்விஜய் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு போஸ்டரில் விநாயகருடனும், கையில் அரிவாளுடனும் உள்ள போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு ராமேஸ்வரம், காரைக்குடி, பழனி, சென்னை பகுதிகளில் நடந்தது. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ராஜபாளையம் பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
யானை படத்தின் டீசர் இன்று டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வெளியாகியது. ராமேஸ்வரத்தை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. டீசரில் விநாயகர் சிலையுடன் தோன்றும் அருண் விஜய்யின் சண்டைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளை வேட்டி சட்டையுடன் அருண் விஜய்யின் தோற்றம் சிங்கம் பட சூர்யாவின் தோற்றத்துடன் ஒத்து உள்ளது. படத்தின் ஒளிப்பதிவும், பின்னனி இசையும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. முதலில் யூடியூப்பில் வெளியான யானை பட டீசர் ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் காப்பி ரைட்ஸ் பிரச்சினையால் நீக்கப்பட்டு மீண்டும் ஒரு புதிய டீசர் கட் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டது.