தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தி போன்ற மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்வது வாடிக்கையான ஒன்று.
2019 ஆம் ஆண்டில் வெளியான மகிழ் திருமேனி இயக்கிய 'தடம்' படத்தில், அருண் விஜய், தான்யா ஹோப் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஆக்ஷன்-த்ரில்லர் வகைமையில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த படம் தெலுங்கில் 'ரெட்' என ரீமேக் செய்யப்படுகிறது, ராம் பொத்தினேனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது, 'தடம்' படத்தின் இந்தி ரீமேக் அறிவிக்கப்பட்டு, பிரபல ஹீரோ ஆதித்யா ராய் கபூர், அருண் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பூஷண் குமாரின் டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் முராத் கெதானியின் சினி 1 ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வர்தன் கேத்கர் இயக்குனராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பரில் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.