நடிகர் அருள்நிதி தல அஜித்தை சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து அருள்நிதி நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.
பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் த்ரில்லர் படமான ‘K13’ திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே.3ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அருள்நிதி, அஜித் குறித்து தனது தாத்தாவும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி குறித்தும் அவரது ஆரம்பக் கால சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தல அஜித்தின் கேரக்டர் பற்றி மற்றவர்கள் சொல்வதை கேட்டே அவர் மீது மரியாதை வந்தது. விஜய் சாரும் எனக்கு பிடிக்கும், அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். ஆனால் அஜித் சாரை முதன்முறையாக எனது திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக அவரது மேனேஜர் மூலம் வீட்டில் சென்று சந்தித்தேன்.
‘டிமாண்டி காலனி’ திரைப்படம் ரிலீசாகியிருந்த சமயம் அது, வீட்டிற்குள் வரவேற்ற போதே ‘டிமாண்டி காலனி’ வெற்றிக்கு வாழ்த்துக்கள் அருள்நிதி என்று வரவேற்றார். அவரது வீட்டில் பணிபுரியும் பெண் ஜூஸ் கொண்டு வந்தபோது அஜித் சார் எழுந்து சென்று அந்த ஜூஸை வாங்கி வந்து அவரே எங்களுக்கு கொடுத்தார். அவரது இந்த செயல் என்னை வியக்க வைத்தது என்றார் அருள்நிதி.
மேலும், தாத்தா மு.கருணாநிதி குறித்து பேசிய அவர், தான் தமிழில் மிகவும் மோசமாக இருந்ததையும், அதை அறிந்து தாத்தா அம்மாவிடம் கேட்டதாகவும், ‘வம்சம்’ படத்தில் தனது நடிப்பை பார்த்து பாராட்டுவதற்காக அல்லாமல் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என ஊக்குவிக்கும் விதமாக ஒரு வாட்ச் ஒன்றை தாத்தா பரிசளித்தது மறக்க முடியாதது என அருள்நிதி தெரிவித்துள்ளார்.
சாம் சி.எஸ் இசையமைக்கும் அருள்நிதியின் K13 திரைப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க சஸ்பன்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.