கடந்த 1991-ம் ஆண்டு திரைத்துறையில் ஒரு புதிய அலை உருவானது. காதலை இப்படியெல்லாம் ஒரு படத்தில் சொல்ல முடியுமா என்கிற அளவுக்கு அனைவரையும் வியக்கவைத்த, வாயடைத்துப் போக வைத்த படமாக வெளியானதுதான் நடிகர் முரளி நடிப்பில் உருவான ‘இதயம்’.
இந்த படத்தில், அந்த இதயம் வருடும் மெல்லிய காதல் கதையை சொன்னதன் மூலம் திரையுலகால் அடையாளம் காணப்பட்டவர் இயக்குநர் கதிர். அதன் பின்னர் காதலர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பிரம்மாண்ட காதல் திரைப்படங்களாக ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’, ‘காதல் வைரஸ்’ போன்ற படங்களை கதிர் இயக்கினார். இந்த திரைப்படங்களில் இயக்குநர் கதிர் நடிகர்களான அப்பாஸ், வினீத், குணால் ஆகியோரைக் கொண்டு, மரண மாஸ் ஹிட் கொடுத்திருந்தார்.
இன்றளவும் ஏகோபித்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இத்தகைய திரைப்படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்தன. கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியிலான திரைப்படங்களுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் உருவாகினர்.
இந்நிலையில் தான், 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார் இயக்குநர் கதிர். ஆம், இயக்குநர் கதிரின் அடுத்த திரைப்படம் எப்போது வரும் என ஏங்கிக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது.
ஆம், பெரும் காதல் படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் கதிரின் அடுத்ததொரு திரைப்படம் எடுப்பதுடன் இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையவிருக்கிறார்.
இதுபற்றி நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்துகொண்ட இயக்குநர் கதிர் அவர்கள், “ஆம், ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையவிருக்கிறேன். நிச்சயம் ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரியாக இந்த படம் இருக்கும். விரைவில் இதர தகவல்களுடன் ரசிகர்களை சந்திப்போம்” என மாஸ் அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் கதிர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ இணையவிருக்கும் இந்த படம் பற்றிய தகவல்களுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெய்ட்டிங்!