தமிழ் மற்றும் கன்னட திரைப்பட உலகின் பிஸியான முன்னணி நடிகர் அர்ஜூன்.
தமிழில் ‘நெருங்கி வா முத்தமிட்டுவிடாதே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன். இவர் நடிகர் அர்ஜூனுடன் கன்னடத்தில் நடித்து வெளியான விஸ்மயா (தமிழில் நிபுணன்) என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன், தனக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் #MeToo புகாரைத் தொடர்ந்திருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அவர் தொடர்ந்த இந்த வழக்கில் பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணை முடிவில், நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்கிற முடிவை காவல்துறை எட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல் நடிகர் அர்ஜூன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக முகாந்திரம் இல்லை என்பதால், புகார் அள்த்த நடிகை ஸ்ருதி ஹரிஹரனை, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கோரி கப்பன் பார்க் போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அர்ஜூனுக்கு ஆதரவாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர் துருவா சர்ஜா, நடிகை மேக்னா ராஜ் அனைவருமே அர்ஜூன் பேசிய ஒரு உருக்கமான வீடியோவை பகிர்ந்துள்ளனர். அர்ஜூன் பேசிய இந்த வீடியோ பதிவில், “தவறு யார் செய்தாலும் தவறுதான், நியாயம் கண்டிப்பா ஜெயிக்கும், எனக்கும் 2 பொண்ணுங்க இருக்காங்க. உண்மை எப்போதும் ஜெயிக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த நடிகர் துருவா சர்ஜா, “உண்மையாய் இருப்பவர்களுக்கு நல்லதுதான் நடக்கும். இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வந்த போலீஸ், வழக்கறிஞர்கள், எங்களுக்காக அர்ஜூனை நம்பிய மக்கள் அனைவருக்குமே நன்றி! ஜெய் அனுமான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூன், “உண்மையான ஒருவருக்கு கிடைக்க வேண்டிய நியாயம் கண்டிப்பாக கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.