மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
தனது முதல் படத்திலேயே, தான் இசையமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலம் தேசிய விருதையும் வென்று காட்டினார் ஏ.ஆர். ரஹ்மான்.
இதன் பின்னர், தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் வித விதமான பாடல்கள் மற்றும் இசை என ரசிகர்களை ஈர்த்த ரஹ்மான், தமிழ் சினிமாவை தாண்டி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளிலும் இசையமைக்க தொடங்கினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளால், ஹாலிவுட்டிற்கும் சென்ற ரஹ்மான், ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்று ஒட்டுமொத்த உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.
இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியும், இன்றும் அவரது இசையால் ரசிகர்கள் பலரையும் கட்டிப் போட்டு வருகிறார். பல ஆண்டுகளாக தமிழ் சினிமா காத்திருந்து, நேற்று (30.09.2022) மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் வெளியான நாள் முதல், ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் தான் இருந்து வருகிறது. தொடர்ந்து, படம் நேற்று ரிலீஸ் ஆன பின்னர், மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில், ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் திரை அரங்கில் அதிகம் கொண்டாடப்பட்டிருந்தது.
முப்பது ஆண்டுகளாக ரசிகர்களை தனது இசையால் கட்டிப் போட்டு வரும் ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் வெற்றிக்கு மத்தியில் அசத்தலான அறிவிப்பு ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாவில் ரஹ்மானை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை, தற்போது 7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக, புகைப்படம் ஒன்றை பகிர்ந்த ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் வெற்றியை 7 மில்லியன் இன்ஸ்டா நண்பர்களுடன் கொண்டாடுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 7 மில்லியன் பேர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை இன்ஸ்டாவில் பின் தொடர்வதற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.