சென்னை: இயக்குனர் பாலா தயாரித்த படத்தின் பாடலை இரு குழந்தைகள் பாடுவதை கேட்டு இசைப்புயல் ரஹ்மான் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு ஏ ஆர் ரகுமானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய முக்கிய படங்களில் பணியாற்றுகிறார். இயக்குனர் மாரிசெல்வராஜின் புதிய படமும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரஹ்மான் வீடியோ பதிவு ஒன்றை இட்டு, "இந்த இரண்டு சகோதரிகளும் இந்தப் பாடலின் மூலம் சில தீவிரமான கேள்விகளைக் கேட்கிறார்கள்..." என குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், "தாய்ப்பாலும் தண்ணீரும் ஒன்னாதான் இருந்துச்சு விலை இல்லாம கெடந்துச்சு ஆனா இப்போ எல்லாமே தலைகீழா போனுச்சு தடம் மாறி நின்னுச்சு ஆறிருக்கும் பக்கத்துல ஊரு உருவாகுச்சு வரலாறு சொல்லுச்சு ஊரு மட்டும் இருக்குதய்யா ஆற மட்டும் காணல. போன இடம் தெரியல. நிலவுல தண்ணீரு இருக்கானு தேடுறோம். ராக்கெட்டை ஏவுறோம் குடிநீரை பூமியில வியாபாரம் பண்ணுறோம்". என பாலா தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கிய சண்டிவீரன் படத்தின் இந்த பாடலை இரு பெண் குழந்தைகள் பாடியுள்ளனர். சண்டி வீரன் படத்தில் இந்த பாடலை நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு பாடி இருந்தார். இசையமைப்பாளர் அருணகிரி இசையமைத்து இருந்தார்.
இரண்டு கிராமங்களுக்கு நடுவே ஏற்படும் குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவானது. அதர்வா முன்னணி நடிகராகவும், ஆனந்தி ஹீரோயினாகவும், லால் வில்லனாகவும் நடித்து இருந்தார். டெல்டா மாவட்டங்களின் குடிநீர் சிக்கலை இந்த படம் பேசி இருந்தது. 2015 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.