Lata Mangeshkar, 06, பிப்ரவரி 2022:- பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறைவால் காலமாகியுள்ளார். இந்த துயர நிகழ்வு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர்
மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்துமே வெகுமக்கள் மத்தியில் பிரபலம். தமிழில் ஏராளமான ஹிட் மற்றும் மனம் விரும்பும் மெலோடி பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
தமிழில் வளையோசை கலகலவென, செண்பகமே செண்பகமே, ஓ பட்டர்ஃப்ளை உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்..
பாடகி லதா மங்கேஷ்கரின் மரணத்துக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் லதா மங்கேஷ்கர் மரணம் பற்றி உருக்கமாக பேசியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “லதா மங்கேஷ்கர் பாடகரோ, ஐகானோ இல்லை. அவர் இசையின் உயிர். உருது, இந்தி , பெங்காலி என பல மொழிகளிலும் பாடியவர்.
அவருடைய இழப்பு நம் அனைவருக்கும் பெரிய இழப்பு, அவரது இசையை கேட்டு தான் பால்யத்தில் ஒவ்வொரு நாளும் வளர்ந்தேன். அவருடன் பின்னாளில் பணிபுரிந்த பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் ஸ்டேஜில் பாடும்போது நிறைய கற்றுக்கொண்டேன்.
ஒவ்வொரு வரிகளையும் மெதுவாகவும் ஆமாகவும் தானும் புரிந்துகொண்டு பாடலிலும் கொண்டு வருவார். அதுதான் அவருடைய அர்ப்பணிப்பு, அதை இளம் தலைமுறை கற்க வேண்டும். அவர் பெரிய இன்ஸ்பிரேஷன். கடந்த நூற்றாண்டி இசைக்கடல் அவர். அவரிடம் இருந்து கற்றவற்றுடன்.. அந்த லெஜண்டை கொண்டாடுவோம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து அஞ்சலி..
இதேபோல் பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து, லதா மங்கேஷ்கர் பற்றி பேசும்போது, “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. தான் வாழ்ந்த காலத்தில் தன் இசை எனும் ஆதிக்கத்தை செலுத்தியது தான் அவரது பெருமை.
மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல.. ரோட்டுக்குடிக்கும் பாடியவர் அவர். உழைக்கும் மக்கள் அவர் பாடலை கண்ணீரை துடைத்து, துக்கத்தை மறந்து மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார். இந்தியர்களின் வாழ்வியலோடு கலந்த அந்த மாபெரும் இசை அரசியின் புகழ் வாழ்க” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.