மகள், பெற்றோருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதையடுத்து பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் கஷ்யப் ட்விட்டரில் விமர்சித்தார்.
இந்த நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு எது சரியாக இருக்கும் என்பது தனக்குத் தான் தெரியும் என ஒருவர் நினைத்துக் கொண்டிருப்பதும், அதை அமல்படுத்த அதிகாரம் வைத்திருப்பதும் தான் பயமாக உள்ளது என்று ஜம்மு விவகாரம் பற்றி ட்வீட் செய்தார் அனுராக் கஷ்யப்.
அனுராக் கஷ்யப் குறிப்பிட்ட அந்த ஒரு நபர் யார் என்று அவர் பெயரை தெரிவிக்காமலேயே அனைவருக்கும் புரிந்துவிட்டது. இதையடுத்து குறிப்பிட்ட கட்சி ஆதரவாளர்கள், அந்த ஒரு நபரின் ஆதரவாளர்கள் அனுராக் கஷ்யப்பை விளாசினார்கள். இதையடுத்து அனுராக் கஷ்யப் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். ட்விட்டரில் இருந்து வெளியேறும் முன்பு அவர் கூறியதாவது, பெற்றோருக்கும், மகள் ஆலியாவுக்கும் மிரட்டல் வருகிறது. மூடர்கள் அதிகாரம் தான் புதிய வாழ்க்கை போன்று. இந்த புதிய இந்தியா தொடர்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் வெற்றியும், மகிழ்ச்சியும் உண்டாகட்டும். நான் ட்விட்டரில் இருந்து விலகுவதால் இது தான் என் கடைசி ட்வீட். நான் நினைப்பதை பயப்படாமல் பேச முடியவில்லை என்றால் நான் பேசவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மே மாதம் 23ம் தேதியும் அனுராக் கஷ்யப்பின் மகளுக்கு பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிறகு அனுராகின் மகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை பார்த்த அனுராக், மோடி சார். உங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களின் வெற்றியை கொண்டாடும் ஆதரவாளர்கள் என் மகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இதை எப்படி கையாள்வது என்று கூறுங்கள் சார் என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.