Andhra Pradesh: ஆந்திராவில் தெலுங்கு துணை நடிகை ஜோதி ரெட்டி, ரயில்வே தண்டவாளத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோதி ரெட்டி (Jyothi Reddy)
ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த நடிகை ஜோதி ரெட்டி, தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவர் மகர சங்கிராந்தி பண்டிகைக்காக (நம் ஊரின் பொங்கல்) கடப்பா சென்று அங்கு 3 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் ஐதராபாத் வந்துள்ளார்.
ரயில்வே தண்டவாளத்தில்..
இந்நிலையில் ஜோதி ரெட்டி தான் கடந்த 18-ம் தேதி, ஐதராபாத் ஷாத்நகர் ரயில்வே தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளதாக அங்கு கூடியிருந்தவர்கள் பார்த்துள்ளனர், உடனே அவர்கள் இதுபற்றி, அருகில் இருந்த ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
ஜோதி ரெட்டி மரணம்
இதனை அடுத்து விரைந்து வந்து பார்த்த ரயில்வே போலீஸார் ஜோதி ரெட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் துணை நடிகை ஜோதி ரெட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
உறவினர்கள் மறியல்
எனினும் ஜோதி ரெட்டி இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் இதுகுறித்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவருடைய உறவினர்கள் சிலர் வலியுறுத்தியதை அடுத்து, ஜோதிரெட்டி இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார், விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
ஓடும் ரயிலில் ஜோதி ரெட்டி உண்மையில் தவறி விழுந்து இறந்தாரா? அவரை யாரேனும் தெரிந்தோ தெரியாமலோ தள்ளிவிட்டார்களா? என்பது குறித்த பேச்சுகள் பரபரப்பு ஆகியுள்ளன.