90-களின் இறுதியிலும் 2000-மாவது வருடத்தின் தொடக்கத்திலும் பிரபலமான VJ, நடிகர் ஆனந்த கண்ணன் நேற்றைய தினம் மரணமடைந்துவிட்டதாக திடீர் செய்தி வந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனந்த கண்ணன் உயிரிழந்த இந்த தகவலை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததை அடுத்து, பலரும் ஆனந்தக் கண்ணனின் மறைவு செய்தியைக் கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர்.
தொடக்கத்தில் சன் மியூசிக் இசை சேனலில் தொகுப்பாளராக அறியப்பட்ட ஆனந்த கண்ணன், பின்னர் சன் டி.வியின் பிரபல ஆங்கராக மாறினார். அதன் பின்னர் ‘சிந்துபாத்’ என்னும் சன் டி.வி தொடரில் நாயகனாகவும் நடித்து இருந்தார். இந்நிலையில்தான் ஆனந்தக் அண்ணன் கேன்சரால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதனிடையே ஆனந்த கண்ணன் மறைவுக்கு முன்னால் பேசிய கடைசி வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் ஆனந்த கண்ணன், தான் நடித்த நாடகத்தை பற்றி குறிப்பிடுவதுடன், அந்த நாடகத்தில் தன்னுடன் நடித்தவர்களுடன் நேரலையில் உரையாடுகிறார்.
அண்மைக் காலமாக சிங்கப்பூரில் பெரும்பாலும் லைவ் மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஆனந்த கண்ணன், அவ்வப்போது தமிழ்நாட்டுக்கு விசிட் அடிப்பார். இந்த வீடியோவில் கூட, “தமிழ்நாட்டுக்கு எப்போது கதவுகள் திறக்குமோ அப்போதுதான் வரவேண்டும்” என்று லாக்டவுனை குறிப்பிட்டுக் கூறுகிறார் .