பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் 'Gold'. நேரம், பிரேமம் ஆகிய இரண்டே திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்த அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 7 ஆண்டுகள் கழித்து Gold திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த திரைப்படத்தில், பிரித்விராஜ், நயன்தாரா, லாலு அலெக்ஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி இருந்த நிலையில், ரிலீஸுக்கு முன்பாக டீசர் மற்றும் சிங்கிள் பாடல் மட்டுமே வெளியாகி இருந்தது.
அல்போன்ஸ் புத்ரன் இயக்கம், ட்ரைலர் உள்ளிட்ட ப்ரோமோஷன்கள் இல்லை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது. அப்படி ஒரு சூழலில், படம் ரிலீஸ் ஆன பிறகு கலவையான விமர்சனங்கள் வெளியாகி இருந்தது. பிரேமம் திரைப்படம் அளவுக்கு இல்லை என்றும் ஏராளமானோர் விமர்சனம் செய்திருந்தனர்.
இந்த நிலையில், கோல்டு படத்திற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கோல்டு படத்தை குறித்து வந்த நெகடிவ் விமர்சனங்களை எல்லோரும் பார்க்க வேண்டும். என்னை பற்றியும், என் படத்தை பற்றியும் கொஞ்சம் குசும்பும், கொஞ்சம் அவமதிப்பும் கேட்க முடியும். அதை கேட்கும் போது, கிடைக்கும் ஒரு சந்தோசம் இருக்கே.. நெகடிவ் விமர்சனம் எழுதிய அனைவருக்கும் எனது ஸ்பெஷல் நன்றிகள்.
டீ நன்றாக இல்லை என உடனடியாக சொல்லி விட முடியும்!!.. டீயின் டிகாஷன் அதிகமா குறைவா?., தண்ணீர் அதிகமா குறைவா?. பால் கெட்டு போய்விட்டதா? இல்லை கரிந்து போனதா?. இனிப்பு அதிகமா இருக்கு, இல்ல குறைந்து போய் விட்டது என கூறினால், டீ போடும் நபர் அடுத்த முறை டீ போடும் போது அது அவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அட, கேவலமான டீ, குடிக்கவே முடியாத டீ என கூறினால் உங்களின் ஈகோ தான் ஜெயிக்கும். இதன் காரணமாக, இரண்டு பேருக்கும் பயன் இருக்காது. நேரம் 2, பிரேமம் 2 என நான் இந்த படத்திற்கு பெயரிடவில்லை. கோல்டு என்று தான் பெயர் வைத்தேன். நானும், இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த யாரும் உங்களை வெறுக்க வைக்கவோ, தொந்தரவு செய்யவோ, உங்களின் விலைமதிப்புள்ள நேரத்தை வீணடிக்கவோ இந்த திரைப்படத்தை உருவாக்கவில்லை. இனியும் என்னையும், எனது குழுவினரையும் சந்தேககிக்க வேண்டாம்.
பின் குறிப்பு : கோல்டு அப்படி எடுத்திருக்கலாம், இப்படி எடுத்திருக்கலாம் என சொல்ல வேண்டாம். ஏனென்றால், நானும் கோல்டு என்ற திரைப்படத்தை முதல் முறையாக தான் எடுத்தேன். இதற்கு முன்பு கோல்டு படம் செய்த அனுபவம் உண்டாகி இருந்தால், நீங்கள் சொல்வது சரியாக இருந்திருக்கும். உங்கள் சொந்தம் அல்போன்ஸ் புத்ரன்" என குறிப்பிட்டுள்ளார்.
கோல்டு படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து, படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் பகிர்ந்துள்ள பேஸ்புக் பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.