பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிப்பு, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என தனது திறனை நிரூபித்துள்ளார். வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய 'தட்டதின் மராயத்து' & தியாகராஜா குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' உட்பட பல திரைப்பட டிரெய்லர்களை அவர் எடிட் செய்திருந்தார்.
இப்போது, இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக்கில் இந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் தமிழர்கள் குறித்துக் காட்டியதில் ரோஹித் ஷெட்டியுடன் எனக்கு கருத்தியல் பிரச்சினை ஏற்பட்டதாக 6 வருடங்களுக்கு முன்பு நான் கூறியிருந்தேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தமிழர்களைக் அசிங்கப்படுத்த வேண்டும் என்பது அவருடைய நோக்கமல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். இயக்குனர் ரோகித் ஷெட்டி தமிழ் இயக்குனர் ஷங்கரின் படங்களால் அகத்தூண்டல் செய்யப்பட்டு தனது படத்தின் காட்சிகளை வைப்பதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே, என்னுடைய பழைய கருத்துகள் குறித்து நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தற்போது இந்தி 'சிங்கம்' இரண்டாம் பாகம் படம் குறித்து நான் ஒரு நல்ல விடயம் சொல்கிறேன். அரசியல் கட்சிகளிடமிருந்து பணம் பெறுவது குறித்து ஹீரோவின் அம்மா கோபப்படுவது போன்ற ஒரு காட்சி படத்தில் உண்டு. அந்தக் காட்சியை பார்த்து நான் மிகவும் அழுதுவிட்டேன். கதாநாயகன் தன் தாயிடம் தோற்றுப்போகும் அந்தக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததில்லை. அதுபோன்ற ஒரு காட்சியை அமைத்த உங்களுக்கு என்னுடைய மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன். உங்களுடைய பெரும்பாலான படங்கள் ('கோல்மால்' சீரிஸ், 'சிங்கம்' சிரீஸ், 'சிம்பா') எனக்குப் பிடிக்கும். 'சூரியவன்ஷி' படத்துக்காக நான் காத்திருக்கிறேன் சார். இந்த இளைய சகோதரனை மன்னியுங்கள்". என பேஸ்புக்கில் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
பிரேமம் படம் வெளியான பிறகு அல்போன்ஸ் புத்திரன், ரோகித் ஷெட்டி குறித்து வெளியிட்ட கருத்து அப்போது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.