அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதலாம் பாகம் திரைப்படம் வரும் டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் லைகா இப்படத்தின் பதிப்புரிமையை கைப்பற்றி வெளியிடுகிறது. சுகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, இப்படத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தன்னா, ஃபகத் ஃபாசில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில், ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் பேசும்பொழுது தமிழில் பேசினார். அப்போது, “நான் தமிழில்தான் பேச போகிறேன். நிறைய தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்” என்று பேசிய அல்லு அர்ஜூன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக நன்றிகளை தெரிவித்து, “நான் குள்ளமாக இருந்தாலும் நான் கொஞ்சம் மேலே போவதற்கு உதவி செய்திருக்கிறீர்கள்!” என்று நெகழ்ந்து இருக்கிறார்.
மேலும் பேசியவர், “புஷ்பா திரைப்படம் தமிழிலும் உருவானதற்கு முதற்கட்டமாக நான் மதன்கார்க்கி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த திரைப்படத்தை பார்த்து தேவி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தை நான் தேவி என்று தான் அழைப்பேன். அவர் இது தமிழ் படம் போலவே வந்திருக்கிறது, நீயும் தமிழ் படம் போலவே நடித்து இருக்கிறாய் என்று சொன்னதும் யோவ் நான் தமிழ்தான்யா என்று கூறினேன்.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழில் தான். என் பெரும்பாலான வாழ்க்கை கட்டம் தமிழ்நாட்டில் தான் இருந்தது. வட நாட்டில் எங்காவது சென்றால், அல்லு அர்ஜூன் என்கிறார்கள், என் ஊரில் சொல்ல வேண்டுமே?” என்று தமிழ்நாட்டை குறிப்பிட்டுப் பேசும் அல்லு அர்ஜூன், “தமிழ் மக்களுக்கு மிகவும் கனெக்ட் ஆகக்கூடிய ஒரு திரைப்படத்தை பண்ண வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தேன்.
அப்படி ஒரு படமாக இந்த திரைப்படம் வந்ததற்கு மதன் கார்க்கி முக்கியமான காரணம். அவருக்கு மிகவும் நன்றி. தமிழில் அவர் தான் பண்ணவேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். இந்த திரைப்படம் திருப்பதி பகுதியில் நடக்கிறது. இதற்காக காட்டுப்பகுதிகளில் ஷூட் பண்ண வேண்டுமென்று மெனக்கெட்டோம்.
கோவிட் சூழ்நிலைகளில் முறையான நெறிமுறைகளைப் பின்பற்றியும், வேறு வகையில் மிகவும் சிரமப்பட்டும் இந்த திரைப்படம் உருவாகி வந்திருக்கிறது. நான் தவறாக தமிழ் பேசுகிறேன், பரவாயில்லை தப்புத்தப்பாக பேசினாலும் தமிழில் பேசினால் அழகாக இருக்கும், தமிழில் பேசுகிறேன் என்பதே எனக்குப் போதுமானது!” என்று பேசியிருக்கிறார்.