ஐத்ராபாத்: புஷ்பா படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் சித்ஸ்ரீராம் பாடியதற்கு அல்லு அர்ஜூன் பாராட்டியுள்ளார்.
பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' கடந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
புஷ்பா : தி ரைஸ் பாகம் - 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது. இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது. ஹிந்தியில் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. சுமார் 90 கோடி ரூபாயை வசூல் செய்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி உள்ளது.
இந்நிலையில் புஷ்பா படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் அல்லு அர்ஜூன் பகிர்ந்துள்ளார். அதில் "ஓய்வு நேரத்தில் இதை எழுத விரும்பினேன். எனது சகோதரர் சித்ஸ்ரீராம் அவர்கள் புஷ்பா பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வின் மேடையில் "ஸ்ரீவள்ளி" பாடலைப் பாடிக்கொண்டிருந்தார். இசையில்லாமல் பாட ஆரம்பித்தார் & இசைக்கருவிகள் மெதுவாக அவரது குரலை ஆதரிக்கத் தொடங்கும் என்று நான் காத்திருந்தேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை. மேலும் இசையில்லாமல் பாடிக்கொண்டே இருந்தார். நான் அவர் குரலில் அடித்துச் செல்லப்பட்டேன். அது மிகவும் மாயாஜாலமாக ஒலித்தது. அப்போது எனக்குள் நினைத்தேன் ...அவருக்கு இசை தேவையில்லை ...... ஏனெனில் அவர் தான் இசை " என அல்லு அர்ஜுன் குறிப்பிட்டுள்ளார்