ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களில் திரைப்பட நடிகை பிரியாராமன், நடிகர் அக்னி, நடிகை ஷபானா நடித்து வருகின்றனர். இதில் ஷபானா செம்பருத்தி ஆக நடிக்கிறார்.
தற்போது செம்பருத்தி யாருடைய மகள் என்கிற கேள்விக்குள் கதை சென்றுகொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரியாக வரும் பிரியா ராமனின் வீட்டு கார் டிரைவர் சுந்தரத்தின் மகளாகவே இதுநாள் வரை இருந்த செம்பருத்தி, அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் மகள் தான் என்கிற உண்மை தற்போது செம்பருத்திக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்த உண்மையை சொல்ல வேண்டும் என்று அகிலாண்டேஸ்வரி செம்பருத்திக்கு கெடு கொடுக்கிறார். ஆனால் ஒரு ரத்த சொந்தமாக அல்லாமல், தன் வீட்டு கார் டிரைவரின் மகளாகவே தன்னை அகிலாண்டேஸ்வரி ஏற்று, தன்னை மருமகளாக நடத்த வேண்டும் என்று செம்பருத்தி நினைக்கிறாள்.
இதேபோல், செம்பருத்தி நாயகன் ஆதியும் தன்னை, அதே காதலியாக தான் ஏற்க வேண்டும் என்று அவரிடமும் தான் அவரது ரத்த சொந்தம் என்கிற உண்மையை சொல்லாமல் செம்பருத்தி மௌனம் காத்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களிடம் சொல்லாமல், செம்பருத்தி வீட்டை விட்டு செல்ல முடிவெடுக்கும் காட்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன.
முன்னதாக அகிலாண்டேஸ்வரியின் விசுவாசமான வீட்டு வேலைக்காரியாக இருந்து அவருக்கு மருமகளாக மாறிய செம்பருத்தி, அகிலாண்டேஸ்வரிக்காகவும், அந்த குடும்பத்தின் நலனுக்காகவும் அவ்வப்போது பல பூஜைகளை செய்து வருவார்.
அந்த வகையில் தற்போது செம்பருத்தியின் நவக்கிரக தோஷ வேண்டுதலுக்காக அனைத்து ஜீ தமிழ் சீரியல் நாயகிகளும் அம்மன் வேடத்தில் வரக்கூடிய காட்சிகள் அரங்கேறுகின்றன.
ஜீ தமிழில் தேவயானி நடிக்கும் புதுப்புது அர்த்தங்கள் தொடங்கி நீதானே என் பொன்வசந்தம், என்றென்றும் புன்னகை, சித்திரம் பேசுதடி, ராஜா மகள், திருமதி ஹிட்லர், கோகுலத்தில் சீதை என பல சீரியல்கள் ரசிகர்களிடையே வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. கொஞ்ச நாள் முன்புதான் ஸ்ரீ, நட்சத்திரா மற்றும் சாயித்ரா ரெட்டி நடித்த யாரடி நீ மோகினி சீரியல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இந்த சீரியல்களில் நடிக்கும் 9 நாயகிகள், தற்போது செம்பருத்தி சீரியலில் செம்பருத்தியின் நவக்கிரக தோஷ பிரச்சனைக்காக, செம்பருத்தியின் கண்ணீர் துடைக்க, அம்மன் வேடங்களில் தோன்றக்கூடிய காட்சிகள் அரங்கேறுகின்றன.
இதற்கான புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.