நடிகை ஷ்ருதி ராஜ் அழகு சீரியல் குறித்து பேசிய தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அழகு. ரேவதி, தலைவாசல் விஜய், காயத்ரி, ஷ்ருதி ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் இத்தொடர் ரசிகர்களின் வரவேற்புடன் 700 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் அழகு சீரியல் முடிவடைய போவதாகவும், விரைவில் க்ளைமாக்ஸ் வெளியாக போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அழகு சீரியலில் முடிவு குறித்து அதில் நடித்த ஷ்ருதி ராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, ''போன மாதமே அழகு சீரியல் ஷூட்டிங்கிற்கு அழைத்தார்கள். ஆனால் அது கொரோனா நேரமாக இருப்பதாலும், எனக்கும் கொஞ்சம் சைனஸ் பிரச்சனை இருப்பதாலும் நான் ஷூட்டிங் வர முடியாது என்பதை அழகு டீமுக்கும் சானலுக்கும் தெரிவித்தேன். பிறகு இந்த மாதம் 8-ஆம் தேதியில் இருந்து ஷூட்டிங் தொடங்கும் என்றுதான் எல்லோரும் பேசி கொண்டார்கள். திடீரென்று சீரியல் ட்ராப் ஆகிவிட்டது என கேள்விபட்டேன். அது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அதன் காரணம் கூட எனக்கு தெரியவில்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடன் அழகு சீரியலில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கு ஷ்ருதி ராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.