தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அஜித்தின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும் பட்சத்தில் இயக்குநர் சிவா அதற்கான தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை நம்மிடையே பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டார்.
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என தொடர்ச்சியாக 4 திரைப்படங்கள் நடிகர் அஜித்துடன் பணியாற்றியவர் இயக்குநர் சிறுத்தை சிவா. நடிகர் அஜித்துடன் மிக நெருக்கமான நட்பு வட்டத்தில் இருக்கும் சிறுத்தை சிவா, Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது அஜித் உடனான நீண்ட பயணம் குறித்து பேசுகையில், “அவர் எனக்கு Friend இல்ல பெரிய அண்ணன் மாதிரி தான். அவர்கிட்ட நான் ரொம்ப விஸ்வாசமா இருப்பேன். என் தொழில் மேல அவருக்கு இருக்கும் மரியாதை, எனக்கு அவர் தொழில் மேல இருக்கும் மரியாதை தான் இதற்கு காரணம்” என்றார். அஜித்தின் பயோபிக் படத்திற்கு என்ன தலைப்பு கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த சிவா, “தன்னம்பிக்கை” என கூறினார்.
மேலும், “அஜித் சாரிடம் எனக்கு பிடித்தது அவரது நேர்மை. பொது இடங்களில் அவர் வராததற்கு காரணம் தன்னை பார்க்க வருபவர்களால் பிறருக்கும், அவர்களுக்கும் எந்த தொந்திரவும் இருக்கக் கூடாது என நினைப்பவர். அதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதை தவிர்ப்பதாக கருதுகிறேன்” என கூறினார்.
தனது திரைப்படங்களில் எப்போதுமே பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வலுவான கதாபாத்திரம் இருக்கும் என கூறிய சிவா, அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘தலைவர் 168’ திரைப்படத்தினை இயக்கவிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.